“கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை” (1இராஜாக்கள் 17:16).

இந்த உலகத்தில் மாறாத ஒன்று கர்த்தருடைய வார்த்தை மாத்திரமே. மற்றவைகள் எல்லாம் தவறிப்போய் விடும். நாம் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு வாழுவதிலும், அனுதினமும் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தரைப் பின்பற்றுவதிலும் ஒருக்காலும் தளர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. தேவனுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம் என்றால், அது மிகச் சிறந்தது. என்ன ஒரு ஆச்சரியமான விதத்தில் தேவன் இந்த விதவையையும் அவள் குடும்பத்தையும் போஷித்தார்! தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது. நம்முடைய ஆத்துமாவைப் போஷிக்க வல்லமையுள்ளது. தேவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் வரும்பொழுது நாம் ஒருக்காலும் குறைவுபட மாட்டோம். அவருடைய வார்த்தையைப் பின்பற்றுவதில் நாம் தவறுவதினால் நாம் நம்முடைய வாழ்க்கையில் அநேக காரியங்களில் குறைவுபட்டுப் போகிறோம். ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் மாறாது. எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே தேவன் முழுமையாக அதை நிறைவேற்றினார். தேவனுடைய மாறாத தன்மையை நாம் இங்கு பார்க்கிறோம். தேவனைச் சார்ந்து வாழும்பொழுது அந்தந்த நாளுக்குரிய காரியங்களை அவர் நமக்குக் கொடுத்து நம்மைப் போஷித்து நம்மை வழிநடத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.