மார்ச் 6     

“அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்” (2 தெசலோ 2:9-10).

      இன்றைக்கு ஜனங்கள் வல்லமை, அடையாளங்கள், அற்புதங்களை விரும்புகிறார்கள். ஆனால் இவ்விதமாக விரும்புகிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு காரியத்தை விட்டு விடுகிறார்கள். அது என்ன? ‘இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால்’ என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு அநேகர் வேதத்தை வாசிப்பதில்லை, தியானிப்பதில்லை. வேதமானது ‘இரட்சிப்பிற்கேற்ற ஞானமுள்ளவனாக்கதக்க வேத எழுத்துக்கள்’ என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு அநேகர் தாங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதான மெய்யான உணர்வும், விருப்பமும் இல்லாமல், வெறுமையாக வல்லமை அடையாளங்கள் அற்புதங்களை நாடுகிற மனநிலையில் காணப்படுகிறார்கள். ஆனால் வேதம் சொல்லுகிறது இவ்விதமான அற்புதங்களைச் சாத்தானும் செய்யக் கூடும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். “அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்” (2 தெசலோ 2:12) என்று வேதம் சொல்லுகிறது.

      பொய்யை நம்பக்கூடிய அளவுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் போவதின் காரணம் என்ன? சத்தியத்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுப்பது. சத்தியத்தை பற்றிக்கொண்டு வாழ்கிற வாழ்க்கையை அவர்கள் விரும்பாமல் போவது. தேவனுடைய சத்தியம் நம்முடைய வாழ்க்கையில் மையமாக காணப்படவேண்டும். சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. பொய்யான காரியங்களை நம்பி மோசம் போகாமலிருக்க வேண்டும். சாத்தானும் ஒளியின் வேடம் தரித்து வரக்கூடும். பொய்யான சகல காரியங்களையும், பொய்யான அற்புதங்களையும், பொய்யான அடையாளங்களையும், பொய்யான வல்லமைகளையும் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் நம்மை வஞ்சிக்கக்கூடும் என்பதை அறியவேண்டும்.