“அப்பொழுது ஆபிரகாம்தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்” (ஆதியாகமம் 22:5).

ஆபிரகாம் ஈசாக்கை பலிசெலுத்தும்படியாக போகிறான். கர்த்தர் அவ்விதமாக பலிசெலுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார். ஆனாலும் இந்த இடத்தில் ஆபிரகாம், நாங்கள் திரும்பி வருவோம் என்று சொல்லுகிறான். ஈசாக்கை பலி செலுத்திவிட்டு நான் வருவேன் என்று சொல்லவில்லை. ஏனென்றால் ஈசாக்கின் மூலமாக உன் சந்ததி விளங்கும் என்று சொன்ன தேவன் அதை நிறைவேற்றுவார் என்று தேவன் சொன்னதை அவன் விசுவாசித்தான். கர்த்தருடைய வார்த்தையின் மேல் ஆழமான விசுவாசம் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும். சூழ்நிலைகள் சந்தர்ப்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இவைகள் மத்தியில் நம் விசுவாசத்தை உறுதியாய் காத்துக்கொள்வது அவசியம். ஆபிரகாமின் விசுவாசத்தை நாம் பார்க்கும்பொழுது, தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லாமல் செயல்படுகிறதைக் குறித்து நாம் பார்க்கிறோம். “ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்” (எபிரெயர் 11:18-19). தேவனுடைய வார்த்தையின் மேல் வைத்திருக்கின்ற உறுதியான விசுவாசத்தை ஆபிரகாம் கொண்டிருந்தான். தேவனுடைய வார்த்தையைச் சார்ந்துக்கொள்ளும்போது நாம் தேவனை சார்ந்துக்கொள்ளுகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறோம். ஆகவே நம்முடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளும் வரலாம். ஆனால் தேவன் தம்முடைய வார்த்தையில் மாற மாட்டார். அவருடைய வாக்குத்தத்தங்களில் மாற மாட்டார். அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்யும்படியான வழிமுறையை அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் விசுவாசத்தில் உறுதியாய் நிற்போம். கர்த்தர் நிச்சயமாக நம்மை பலப்படுத்தி வழிநடத்துவார்.