கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 20                 இயேசுவில் நிலைத்திருத்தல்      யோவான் 15:1-10

என்னில் நிலைத்திருங்கள் (யோவான் 15:4)

    இயேசுவில் நிலைத்திருக்கிற வாழ்க்கை உங்களுக்கு உண்டா? அநேகர் இயேசுவில் நிலைத்திருக்கவில்லை. இயேசுவை தவிர மற்றவைகளில்தான் நிலைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளுகிறார்கள். ஒருவர் இயேசுவில் நிலைத்திருக்கிறாரா இல்லையா என்பதை கீழ்காணும் மூன்று காரியங்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம். அவைகள் யாவன?

    முதலாவது, அவரில் நிலைத்திருக்கிறவன் தேவனுக்கென்று மிகுந்த கனிகளைக் கொடுப்பான். நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்(யோவான் 15 : 5) நீங்கள் அவரில் நிலைத்திருக்கும்போது அநுதினமும் ஆவிக்குரிய சத்துவத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை ஆவிக்குரிய நற்கனிகளைக் கொடுப்பதோடு அநேகம் ஆத்துமாக்களைக் கர்த்தருக்குள் கொண்டுவரும். உங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

    இரண்டாவதாக, தேவனிடத்திலிருந்து ஜெபங்களுக்குப் பதிலைப் பெற்ற ஒரு ஜெப வாழ்க்கை உங்களுக்கு இருக்கும். நீங்கள் தேவனிடத்தில் ஜெபிக்கும்போது ஆச்சரியமான விதங்களில் தேவன் உன் ஜெபத்திற்கு பதிலளிப்பதைக் காண்பீர்கள். இன்னும் அது உன் ஜெப வாழ்க்கைக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்‘ (யோவான் 15:7)

    மூன்றாவதாக, நீங்கள் தேவனுடைய பிள்ளை என்பதின் நிச்சயத்தை அது உங்களுக்கு கொடுக்கும். நீங்கள் வெட்கப்பட்டுப் போகமாட்டீர்கள். ஆவிக்குரிய தைரியத்தைக் கொண்டவர்களாக நீங்கள் வாழுவீர்கள். பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்‘ (1யோவான் 2:28). அன்பானவர்களே! தேவனில் நிலைத்திருக்கிற வாழ்க்கையை வாஞ்சித்து அதற்காக ஜெபியுங்கள்.