கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 21              இயேசு கிறிஸ்துவில்  நிலைத்திருத்தால்        யோவான் 15:1- 27

“என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்;

கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால்

அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில்

நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்” (யோவான் 15:4).

     இயேசு கிறிஸ்துவில் நாம் நிலைத்திருந்தால், அவர் நம்மில் நிலைத்திருப்பார். ஒரு மெய்க் கிறிஸ்தவனின் அடையாளம் அவரில் நிலைத்திருப்பது. யோவான் 8:31 –ல் “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;” என்று சொல்லுகிறார். நாம் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மாத்திரமே கனிகளைக் கொடுக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நம் சொந்த முயற்சிகளின் மூலம் ஒருபோதும் கனிகொடுக்க முடியாது.  ஆத்துமாக்களை நாம் ஆதாயம் செய்ய முடியாது.

     நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்பொழுது, ஆவியின் கனிகள் நம்மில் காணப்படும். மெய்யான சமாதானம் காணப்படும். அதுமாத்திரமல்ல, யோவான் 15:5 –ல் “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்;” என்று தேவன் சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

     நாம் அவரில் எப்பொழுதும் நிலைத்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் எப்பொழுதும் அவரையே பற்றிக்கொண்டு, அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும். நமது போக்கிலும், வரத்திலும் நம்முடைய பாரங்கள், சந்தோஷங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாவற்றையும் அவரிடம் எடுத்துச் செல்லவேண்டும். அவருடைய மிகுந்த கிருபைகளை எண்ணிப்பார்த்து அதிகமான நன்றிகளை ஏறெடுக்க வேண்டும்.அவருடைய வார்த்தையைத் தியானிக்க வேண்டும்

      அவர் நம் வாழ்வில் செய்திருக்கும் எண்ணிலடங்காத நன்மைகளை மறந்துவிடுகிறோம். நமக்கு இருக்கும் குறைகளையே பெரிதாகப் எண்ணுகிறோம். இது தவறு. வேதம் என்ன சொல்லுகிறது, “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்” (1 யோவா 2:6) என்று சொல்லப்படுகிறது. நாம் கிறிஸ்துவுக்குள் நடக்கிறோம் என்று எப்பொழுது சொல்ல முடியும்? அவர் நடந்தபடியே நாமும் நடக்கும்பொழுது மாத்திரமே. இதுவே மெய்யான கனிகொடுக்கும் படியான ஆசீர்வாதமான  வாழ்க்கை.