கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட்  6                    நீர்ப்பாய்ச்சலான  தோட்டம்            எரேமியா  31 : 1 -12

“அவர்களுடைய  ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான

தோட்டம் போலிருக்கும்” (எரேமியா  31 : 12)

    அவர்களுடைய ஆத்துமா விசேஷமானவைகளாய் இருக்கிறது. அந்த ஆத்துமாக்கள் வறண்ட பாலைவனம் போல் அல்ல. இன்றைக்கு அநேகரின் ஆத்துமா வறண்ட பாலைவனம் போல் காய்ந்திருக்கிறது. எல்லா, பயிர்களும், மரங்களும் செடிகளும் காய்ந்த நிலையில் வெறுமையும் வறட்சியுமாக இருக்கிறது. பசுமை அங்கு இல்லை. தங்கி இளைப்பாறுகிற நிழல் அதில் இல்லை. எல்லாவற்றையும் இழந்துபோன நிலையில் காய்ந்து கிடக்கிறது. அன்பானவரே! உன்னுடைய ஆத்துமா எவ்விதம் இருக்கிறது? உன்னில் மெய்யான ஆவிக்குரிய தாகமும், வாஞ்சையும் இல்லாமல் இருக்குமானால் உன் ஆத்துமா வறண்டிருக்கிறது. அதில் ஜீவனில்லாத நிலைமையையே காணமுடியும்.

    ஆனால், இவர்கள் ஆத்துமாக்கள் மட்டும் ஏன் அழகான தோட்டமாயிருக்கிறது? ஏனென்றால் இதன் தோட்டக்காரர் எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிறவர். இந்தத் தோட்டக்காரரான தேவன். இந்த நிலங்களை வறண்ட நிலங்களிலிருந்து வேறுபடுத்தி வேலியடைத்துக் காக்கிறார். இவைகளும் ஒரு காலத்தில் வறண்டுபோயிருந்தன ஆனால் இப்போதோ இவைகள் இந்த தோட்டக்காரர் பராமரிப்பில் வந்திருக்கிறது. அவர் அதில் களைகளை நீக்கி, உரமிட்டுப் பயிர்களைப் பாதுகாக்கிறார்.

    ‘நீர்பாய்ச்சலான தோட்டம் போலிருக்கிறது’ ஆம்! இந்த ஆத்துமாக்களுக்கு நீர் பாய்ச்சுகிறார். தமது ஆவியானவரைக் கொண்டு ஜீவத்தண்ணீரினால் இந்த நிலங்கள் நீர் பாய்ச்சப்படுகின்றன. ஆகவே இந்த நிலத்தில் செடிகள் கொடிகள், மரங்கள் அனைத்தும் பசுமையாய் காணப்படுகின்றன. தன் காலத்தில் தன் கனியைத் தருகிற இலையுதிராத மரங்களைக் கொண்டிருக்கின்றன. உன்னுடைய ஆத்துமா, இன்னும் ஏன் காய்ந்து போன நிலைமையில் தொடர்ந்து இருக்கவேண்டும்? இந்த தேவனிடத்தில் முழுமையாய் வந்து ஒப்புக்கொடு. நீ இன்னும் காய்ந்து போன நிலைமையில் வறண்டிருக்கவேண்டிய அவசியமில்லை. உன் ஆத்துமா நீர்பாய்ச்சலான தோட்டம் போல மாற்றப்படும்.