“ தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்” (மத்தேயு 13:57).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ளுகிறார். ஒருவேளை உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமாய் வாழுகிற வாழ்க்கையை உங்கள் சொந்த மக்கள் அதாவது உங்கள் வீட்டில் கனப்படுத்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய சொந்த வீட்டிலே அவருக்குக் கனம் இல்லாததைப் பார்க்கும்பொழுது நீங்களும் நானும் ஒன்றுமில்லை. ஆகவே நாம் மனிதனுடைய புகழ்ச்சியும் கனத்தையும் எதிர்பார்க்கும்பொழுது நாம் ஏமாந்துவிடுவோம். அது நமக்கு ஒன்றிலும் பிரயோஜனப்படாது. மற்றவர்கள் நம்மைக் கனப்படுத்த வேண்டும் என்று நாம் எண்ணுவதும் சரியல்ல. தேவனுடைய கனத்தை நாம் பெற்றுக்கொள்ளும்படியாகவே வாஞ்சிக்க வேண்டும். “ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால் பிதாவானவர் அவனைக் கனப்படுத்துவார்” என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் மனிதர்களால் கனவீனப்படுத்தப்படலாம். ஆனால் சோர்ந்துபோக வேண்டாம். தேவன் உங்களை கனப்படுத்துவார் என்றால் அதை விட மேன்மையானது வேறொன்றுமில்லை. தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்துபோகிற காரியங்களை அறிந்திருக்கிறார். நம்மைப் போல எல்லாவற்றிலும் சோதிக்கப்பட்டவர் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நம்முடைய பாரத்தைக் கர்த்தர் மேல் வைத்துவிட்டு அவருடைய கனத்தையே தேடுவோம். தேவனால் கனப்படுத்தப்படுகிற வாழ்க்கையை வாழுவோம். அது ஆண்டவருக்குப் பிரியமானதாக இருக்கும். நமக்கும் மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்கும். கர்த்தர் அவ்விதமாக நம்மை ஆசீர்வதிப்பாராக.