“அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.” (ஏசாயா 62:12).
என்னவொரு ஆசீர்வாதமான காரியத்தை இந்த இடத்தில் தேவன் சொல்லுகிறார். அவர்களைப் பரிசுத்த ஜனமென்று சொல்வார்கள். மெய்யாலும் தேவனுடைய பிள்ளைகள் பரிசுத்தமான ஜனமாக இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக பரிசுத்தமாக நாம் வாழ்கிறோமா? ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையில் பரிசுத்தம் என்று சொல்லப்படுவது பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை ஆகும். தேவனுக்காக நான் பிரித்தெடுக்கப்பட்டவன் என்ற உணர்வோடு ஒரு விசுவாசி வாழ்வது மிக அவசியம். அவர்கள் கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவார்கள். மெய்யாலுமே மீட்கப்பட்டவர்கள் தேவனுக்காக வாழ நியமிக்கப்பட்டவர்கள். மேலுமாக நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய். ஆம் தேவன் இந்த உலகத்தில் தம்முடைய மக்களைத் தேடிக் கண்டடைகிறவராக இருக்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே வந்தார் என்று வேதம் சொல்லுகிறது. இந்த ஒரு சிலாக்கியத்தைப் போல உலகத்தில் மேன்மையான சிலாக்கியம் எதுவுமே கிடையாது. நாம் குப்பைகள், ஒன்றுமில்லாமல் போகிறவர்கள். தேவன் கொடுக்கும்படியான இந்த சிலாக்கியம் என்பது மிக அற்புதமானது. நம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பிரித்து எடுக்கப்பட்ட ஒரு மனிதன் என்ற உணர்வோடு அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்வது மிக அவசியம். நம்மை ஆண்டவர் மீட்க செலுத்திய கிரயத்தைக் குறித்த உண்மையான உணர்வோடு வாழுகிற உணர்வு நமக்குத் தேவை. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நாம் அர்ப்பணித்து வாழ்கிற வாழ்க்கை. மேலும் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை என்பதை உணர்வோமாக