மே 13
“திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (சங்கீதம் 119:14).
சங்கீதக்காரன் இந்த இடத்தில் தன்னுடைய களிகூருதலுக்கு காரணம் என்ன என்பதை மிக அருமையாகச் சொல்லுகிறார். இன்றைக்கு மக்கள் உலக செல்வத்தை எப்படி பெற்றுக் கொள்வது என்று வாழுகிறார்கள். அதற்காக அநேகப் பிரயாசங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் நான் செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதே. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதம், உலக செல்வத்தைவிட மேலானது என்பதை எண்ணுவதில்லை. உலக செல்வம் எப்பொழுதும் நம்மில் நிலைத்திருப்பதில்லை. திடீரென்று மறைந்துவிடுகிறது. அநேக நேரங்களில் செல்வம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமென்று எதிர்பார்த்த எதிர்பார்ப்பு நம்மில் நிறைவேறுவது இல்லை. அதற்குப் பதிலாக அநேக துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகிறது. எதிர்பார்ப்பின் ஏமாற்றம் நாம் சந்திக்கும் பொழுது அது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. பணத்தினால் நாம் அநேக காரியங்களைச் சாதிப்போம் என்றாலும், மன நிறைவை அனுபவிக்க கர்த்தர் மட்டுமே உதவி செய்ய வேண்டும்.
ஒருவேளை நம்மில் நிறைய திரளான செல்வம் சேரும்பொழுது அதில் நாம் பல சிக்கல்களையும் காணலாம். அநேகர் நம்மேல் பொறாமை கொண்டு நம்மைப் புறக்கணிக்கலாம். வெளியாக நம் பேரில் அன்பாக இருப்பதைப் போல காணப்பட்டாலும், உள்ளான இருதயத்தில் பொறாமை கொண்டவர்களாக இருப்பார்கள். இது உலக செல்வத்தின் மாயை. ஆனால் இந்த இடத்தில் சங்கீதக்காரன் அழிந்து போகாத நித்தியமான செல்வத்தைக் குறித்துப் பேசுகிறார். இந்த இடத்தில் தன்னுடைய இருதயத்தில் நிறைவான சந்தோஷம் அளிக்கும் மகிழ்ச்சியைக் குறித்துப் பேசுகிறார். ஆண்டவருடைய சத்தியம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்” (சங்கீதம் 119:72) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் வேதத்தில் களிகூர முடியவில்லையென்றால், நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியாக இல்லை என்றுதான் அர்த்தம். வேதம் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய சத்தம். ஆண்டவருடைய சத்தியம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.