ஜூலை 4              

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி 2:14).

ஒருவேளை இந்த வசனம் எனக்கு எப்படி பொருந்தும்? நான் தோல்வியுள்ள கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் என்று சொல்லுகிறாயா? அல்லது இது பவுலை போன்ற மனிதர்கள் மாத்திரமே சொல்லமுடியும், அற்பவிசுவாசியான நான் எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறாயா? அவ்விதம் எண்ணாதே. ஒருவேளை சாத்தான் உன்னை அவ்விதம் எண்ணச்செய்து, ஆவிக்குரிய தோல்வியில் எப்போதும் வைத்துக்கொள்ளப் பார்க்கலாம். தேவனுடைய வார்த்தை எல்லாருக்கும் உரியது. தேவன் பாரபட்சமுள்ளவரல்ல. பவுலுக்கு அவ்விதம் செய்த தேவன் உனக்கும் அவ்விதம் செய்யவல்லவராயிருக்கிறார்.

      பவுல் இந்த வசனத்தை சொல்லுகிற விதத்தை நீ நன்றாய் உற்று கவனி. “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” இரண்டு வார்த்தைகளை முக்கியமாக இதில் கவனிக்க வேண்டும். ஒன்று “கிறிஸ்துவுக்குள்” இரண்டு “தேவனுக்கு” . கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே இவ்விதமான வெற்றி கிடைக்கிறது. கிறிஸ்துவே அவ்விதம் நம்மில் கிரியைச்செய்கிறார். உன்னில் நன்மையென்பது இல்லை. நீ உன் பெலத்தால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அருமையான நண்பரே! கிறிஸ்துவினிடத்தில் வா. உன்னுடைய தோல்வியான வாழ்க்கையை அவரிடத்தில் ஒப்புக்கொடு, ஒப்புக்கொள். தேவன் உன்னை சிறக்கப்பண்ணுவார்.

      உன்னுடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனை, அவருடைய வாக்குத்தத்தத்தை, வார்த்தையை சார்ந்துகொள். விசுவாசத்தோடு தேவனுடைய பெலத்தை எதிர்பார், அப்பொழுது பவுலை போல நீயும் சொல்லக்கூடும். நீ எந்த இடத்தில், எந்த சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தேவனுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையல்ல. தேவன் இடத்தையும் சூழ்நிலையையும் மாத்திரம் மாற்றுபவரல்ல. உன்னை மாற்றுவதையே மையமாக வைத்துச் செயல்படுகிறார். அப்போது நீயும் வெற்றியோடு கடந்துச் செல்வாய்.