அக்டோபர் 20                               விசுவாசத்தில் வல்லவனாதல்                                                    ரோமர் 4 : 17 – 25

‘தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனான.’ (ரோமர் 4 : 21)

ஆபிரகாமின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் விசுவாசத்தை கற்றுக்கொடுக்கும் வாழ்க்கையாக இருக்கிறது. அவனில் ஆரம்பத்திலிருந்து முடிவு மட்டும் விசுவாசம் என்கிற நூல் தொடர்ந்து செல்கிறதைப் பார்க்கிறோம். விசுவாசமே ஒவ்வொரு அடியிலும் அவனுக்கு படியாக, பாதையாக இருந்தது.

இந்த வசனத்தில் அவனுடைய விசுவாசத்தைக் குறித்து சொல்லும்போது மூன்று காரியங்களைப் பார்க்கிறோம். முதலாவது தேவன் நிறைவேற்ற வல்லவர்’ என்பதை அறிந்தான். விசுவாசம் என்பது பெறும் நம்பிக்கையல்ல. விசுவாசத்திற்கு காரணரான  அவரை அறிந்திருந்தால்தான் மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருக்க முடியும். விசுவாசன் என்பது தேவனை எந்த அள்விற்கு அறிந்திருக்கிறாயோ, அந்த அளவிற்கு உன்னில் அதிகரிக்கும். ஆனால் அவரை எங்கே அறிவது? வேதத்தில்தான். வேதத்தில் தம்மை வெளிப்படுத்தி இருக்கிறார். நீ வேறு எங்கேயும் இங்கேயும் அங்கேயும் அலைந்து திரியாதே. வேதத்தை கருத்துடன் வாசி, தியானி. பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் உன்னோடு பேசுவார்.

அடுத்து, தேவனை மகிமைப்படுத்தினான், மனிதனையல்ல. இன்றைக்கு அனேகர் மனிதனை மகிமைப்படுத்துகிறார்கள். அது தவறு. தேவனை மகிமைப்படுத்து. உன் துதியால் தேவனை மகிமைப்படுத்து, உன் வாழ்க்கையால் தேவனை மகிமைப்படுத்து மற்றவர்களிடத்தில் தேவன் உனக்குச் செய்துவருகிற நன்மைகளை ஆசீர்வாதங்களை, விடுதலைகளை சாட்சியாக அறிவி. அவைகள் தேவனை மகிமைப்படுத்து.

மூன்றாவதாக, வல்லவனானான். நீ தேவன அறிந்து வாழும்படியான வாழ்க்கையில் அவரது விசுவாச பள்ளியில் ஒவ்வொரு வருடமும் தேர்ச்சி பெற்றுச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அநேகர்  இன்று முதலாம் வகுப்பை விட்டு தாண்டுவதில்லை. உன்வாழ்க்கையில் விசுவாச வளர்ச்சி மிக அவசியமானது என்பதை மறவாதே.