மாயையான போதனை

விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக்கோபு 4:4).

      உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை. தேவன் மிகத் தெளிவாக வெளிப்படையாக உலக சிநேகத்தைக் குறித்து நமக்குச் சொல்லி இருக்கிறதை நாம் பார்க்கிறோம். அநேகர் உலகத்திற்கும் ஆண்டவருக்கும் நண்பனாக இருப்போம் என்று எண்ணி அவர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது. உலகத்தை நேசிக்கிறவன் நிச்சயமாக தேவனை பகைப்பான். இதனை அறிய மாட்டீர்களா என்று கேட்கிறார். ஆகவே நாம் இவ்விதமான ஒரு ஆவிக்குரிய நிலையைக் கொண்டிருப்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” (யோவான் 15:18-19) என்று இயேசுகிறிஸ்து தெளிவாகச் சொல்லுகிறார்.

      கிறிஸ்துவானவர் ஒரு கிறிஸ்தவனை உலகத்திலிருந்து தமக்கென்று  தெரிந்துகொள்ளுகிறார். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இந்த உலகத்தையும், ஆவிக்குரிய வாழ்க்கையும் இணைத்துப் போதிக்கிறவர்களாக நாம் காணப்படுகிறோமா? இன்றைக்கு அநேக போதகர்கள், அநேக ஊழியர்கள் இந்த இரண்டையும் இணைத்துப் போதிக்கிறார்கள். இது கேட்பதற்கு மிக நன்றாக இருக்கிறது. அது நம்முடைய மனித சிந்தைக்கு உகந்த ஒன்றாக இருக்கும். ஆனால் அவ்விதமான போதனை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவாது. இது தேவனுக்குப் பிரியமில்லாத  போதனை. அவை தேவனால் உண்டானதல்ல. ஒருவருடைய வாழ்க்கையில் இவ்விதமான போதனையை விரும்பி, நம்பி நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்களானால் விழிப்படையுங்கள். நீங்கள் ஆண்டவருக்குப் பிரியமில்லாத வாழ்கையை வாழுவதைப்  போன்று ஆபத்தானது  வேறொன்றுமில்லை. உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.