ஆகஸ்ட்  28                                                   போதிக்கப்படுதல்                                                                              பிலிப்பியர் 4 : 1–12

‘தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும் பரிபூரணப்படவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்’ (பிலி 4 : 12)

நம்முடைய வாழ்க்கை எப்போதும் ஒரே விதமாக இருக்கும் என்று நாம் சொல்லமுடியாது. தாழ்ந்த நிலையிலிருந்து உயர்த்தப்படுவது, உயர்ந்த நிலையிலிருந்து தாழ்த்தப்படுவதும் தேவனுடைய கரத்தில் இடுக்கிறது. நம்முடைய ஞானத்தால் எல்லாவற்றையும் நாமே நம் விருப்பப்படி செயல்படுத்தமுடியும் என்று சொல்லமுடியாது. நம்முடைய கண்களுக்கு எதிராகவே எத்தனையோ மக்களில்; நிலை, மாறுகிறதைப் பார்க்கிறோம். உயர்ந்த நிலையிலிருக்கிறவர்கள் தன்னுடைய நிலை தாழ்வாய் போகும்போது அநேகர் மனமுறிவடைகிறார்கள், நம்பிக்கையிழந்துப் போகிறார்கள்.

ஆனால் ஒரு கிறிஸ்தவன் அப்படியல்ல. தேவன் அவனை எல்லாச் சூழ்நிலைகள் மத்தியிலும் வெற்றியோடு கடந்து செல்ல போதிக்கிறார். தேவன் அவனைப் பக்குவப்படுத்துகிறார். பக்குவமான மனநிலையைக் கொண்ட வாழ்க்கையை அவன் பெற அவனைப் பயிற்றுவிக்கிறார். அன்பான சகோதரனே! சகோதரியே! அவ்விதம் தேவன் உன்னில் உன்னை உருவாக்கும்படி அனுமதிக்கிற  ஒவ்வொரு காரியத்திலும், நீ சோர்ந்துபோகாதே. தேவன் உன்னை மேலான நோக்கத்திர்கென்று உருவாக்குகிறார். உன்னுடைய குறைவில் பொறுமையோடு கடந்து செல்

‘எல்லாவற்றிலும் திருப்தியாருக்கப் போதிக்கப்பட்டேன்’ என்று பவுல் சொல்லுகிறார். திருப்தியற்ற நிலை இன்றைக்கு எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது. தேவன் எத்தனையோ நன்மைகளைக் கொடுத்திருந்தாலும் அதை நோக்காமல் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுக்கொண்டு, திருப்தியற்றவர்களாய் வாழும் அநேக கிறிஸ்தவர்கள் உண்டு. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்’ ( 1தீமோத்தேயு 6 : 6) உன்னுடைய வாழ்க்கையில் தேவன் கொடுக்கிற எண்ணற்ற நன்மைகளுக்காக தேவனைத் துதி. அவ்விதம் தேவனைத் துதிப்பது உன் இருதயத்திற்கு இன்பமாயிருக்கும். ‘இல்லையே’ என்று எப்போதும் முறுமுறுப்பது உன் இருதயத்திற்கு கசப்பாயிருக்கும்.