செப்டம்பர் 2                                                             பரிசுத்தமாகுதல்                                                            கலாத்தியர் 5 : 15 – 26

‘மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது’ (கலா 5 : 17)

ஒரு விசுவாசிக்கு தேவனை அறியாதிருந்த காலத்தில் இந்தப்போராட்டம் இல்லை. அவன் மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான். தேவ நீதிக்கு அவன் மரித்திருந்தான். மாம்ச சிந்தையினால் ஆளுகை செய்யப்பட்டு வந்தான். ஆனால் ஆவியில் உயிர்பிக்கப்பட்டபோதோ, அவன் தேவ நீதிக்கு ஜீவனுள்ளவனானான். இரண்டு விதமான எதிர் காரியங்கள் தற்போது செயல்படதுவங்கிவிட்டது. ஒருபக்கம் பழைய மனுஷக்குரிய பாவத்தன்மை, பாவம் அவனை இழுக்கிறது. தேவனுக்கேதுவான பரிசுத்தம், நீதிக்கேதுவாக,  அவனை வழிநடத்துகிறது. ஆகவே இந்தப்போராட்டம் எப்போதும் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் தொடர்ந்து முடிவுபரியந்தம் இருந்துக் கொண்டிருக்கும்.

நீஅனுதினமும் ஆவியினால் பழைய மனிதனுடைய பாவத்தன்மைகளை அழிக்கும்படி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒரு பக்கம் நீதியின் காரியங்களில், அதாவது பரிசுத்தம், அன்பு இரக்கம் விசுவாசம் போன்ற ஆவியின் காரியங்களை உன்னில் கூட்டிச் சேர்க்கவேண்டும். மறுப்பக்கம் பழைய பாவத்தன்மைக்கேதுவான மாம்ச இச்சை பொறாமை கோபம், பகை, கசப்பு, வெறுப்பு போன்ற மாம்சத்தின் தன்மைகளை எழும்பவொட்டாமல் அடக்கி அவைகளை துளிரிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஆவியினால் மாம்சத்தின் கிறியகளை அழித்தால் பிழைப்பீர்கள். பரிசுத்தமாகுதலின் பாதையில் இது மிகவும் அவசியம்.

இன்று அநேக விசுவாசிகள், தங்கள் பழைய மனிதனுக்குரிய பாவத்தன்மைகளை தொடர்ந்து அழித்துக்கொண்டிராததினால் சாட்சியற்றவர்களாய் ஜீவிக்கிறார்கள்.

பாவ சுபாவங்களிலிருந்து விடுதலையற்றவர்களாய்க் காணப்படுகிறார்கள். உன் ஆவிக்குரிய வாழ்க்கை எப்படியிருக்கிறது? உண்மையான ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் இந்தப் பரிசுத்தமாகுதல் தொடர்ந்து நடைபெறும் என்று வேதம் சொல்லுகிறது. இதுவே கிறிஸ்துவின் சாயலில் வளருவதாகும். அவருடைய சாயலில் வாழ்வதே புதிய மனிதனுக்குரிய வாழ்க்கை.