மே 17       

“பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக” (1 இராஜா 8:45).

சாலமோன் தேவனை நோக்கி ஜெபிக்கும்போது, தேவன் எங்கே இருக்கிறார் என்பதைக்  குறித்த நிச்சயத்தோடு ஜெபிக்கிறதை நாம் பார்க்கிறோம். நாம் விசுவாசிக்கிற தேவன் ஏதோ இருக்கிறாரோ, இல்லையோ என்ற தேவனல்ல. அவர் ஜீவன் உள்ளவர். அவர் பரலோகத்தில் வாசமாயிருந்தது, சகலத்தையும் ஆளுகை செய்கிறவராக இருக்கிறார். அநேக வேளைகளில் நாம் யாரை நோக்கிப் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கத்  தவறிவிடுகிறோம். ‘நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்பதை அறிந்திருக்கிறேன்’ என்ற நிச்சயத்தோடு பவுல் பேசுகிறார். நம் வாழ்க்கையில் தேவனை எந்தளவுக்கு தனிப்பட்ட விதத்தில் நாம் அறிந்து வாழ்கிறோம் என்பது மிக அவசியமானது. அநேக வேளைகளில் நாம் யாரிடத்தில் ஜெபிக்கிறோம் என்ற ஆழமான நிச்சய உணர்வோடு இல்லாத நிலையில், நம்முடைய ஜெபம் கூட ஒரு நிச்சயம் இல்லாததைப்  போலவே நாம் செய்கிறோம்.

நாம் ஒரு மனிதனிடத்தில் ஒரு காரியத்தைப் பேசுவோமானால், நிச்சயமாக அந்த மனிதரோடு இதைக் குறித்துதான் பேசியிருக்கிறோம் என்ற நிச்சயம் நமக்குள் காணப்படும். அதுபோல பரலோகத்தில் நம் தேவன் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்ட வண்ணமாக, அவர் இருக்கிறார் என்ற உணர்வோடு, நம் வாழ்க்கையில் நாம் யாரிடத்தில் செல்லுகிறோம், அவர் எவ்விதமானவர் என்ற உண்மையான உணர்வோடு ஜெபிக்கிறவர்களாகக் காணப்படுவோம். கர்த்தர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தில் பிரியப்படுகிறவராக இருக்கிறார். ஆபத்துக் காலத்தில் அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான் என்று சொல்லுகிறார்.  ஆம், தேவனுடைய பிள்ளைகள் ஜெபிக்கிறவர்களாகக்  காணப்படுவார்கள். அப்போது தேவன் அவர்களுடைய நியாயத்தை விசாரித்து, உன்னதமான பதிலைக் கொடுப்பார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. நாம் பரலோகத்தின் தேவனை அறிந்திருக்கிறோமா? அவர் நம்முடைய ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர் என்பதை நம் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறோமா? சிந்தித்துப் பாருங்கள்.