செப்டம்பர் 24                                     பரம வாசஸ்தலம்                                                      2 கொரிந்தியர் 5 : 1 – 9

‘ஏனெனில், இந்த கூடாரத்தில் தவித்து, நம்முடைய
பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்’ ( 2கொரிந் 5 : 2 )

அநேக கிறிஸ்தவர்கள் இந்த வாழ்க்கை ஒரு கூடார வாழ்க்கை என்று எண்ணுவதில்லை. அவர்கள் நித்திய நித்தியமாய் இந்த உலகத்தில் வாழ்வதைப்போல எண்ணிச் செயல்படுகிறார்கள், திட்டமிடுகிறார்கல், பொன்னையும், பொருளையும் சேகரிக்க தீவிரமாய் ஓடுகிறார்கள். அவர்களுக்கு பக்தி என்பது மனசாட்சியை சாந்தப்படுத்தும் மேற்பூச்சு, அவ்வளவுதான். வாழ்க்கையும் பக்தியும் இணைந்ததுதான் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை. அவ்விதமான வாழ்க்கையில்தான் கர்த்தருக்குள்ளான மகிழ்ச்சி உண்டு. ‘கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்’ (நெகேமியா 8 : 10)

மெய் கிறிஸ்தவனின் வாஞ்சை இவ்வுலகத்திற்க்குறியதல்ல. தேவனுக்கு இடமில்லாத இந்த உலகம் அவனுக்கும் பிரியமானதல்ல. அவன் இந்த உலக வாழ்க்கை ஒரு கூடார வாழ்க்கை என்றும், நிலையான வீடு இங்கு இல்லை என்பதையும் அறிவான். இந்த உலகத்தில் அவன் சந்திக்கும் போராட்டங்கள், தவிப்புகள் நெருக்கங்கள் மேலான பரமவாசஸ்தலத்தை நோக்கிப்பார்க்க அவனை வழிநடத்துகிறது. இந்த உலகத்தில் மெய்கிறிஸ்தவனுக்கும் இளைப்பாருதல் கிடையாது, பரலோகத்தில்தான் உண்டு.

உண்மையான விசுவாசி அனுதினமும் பரலோகத்தை நோக்கிப்பார்க்கிறான். அவன் ஜெபிக்கும்போதெல்லாம் ‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே’ என்று ஜெபிக்கிறான். பரலோகத்தக் குறித்த சிந்தனை ஒரு கிறிஸ்தவனுக்கு எல்லாவற்றையும் காட்டிலும் இனிமையானதாக இருக்கும். இக்காலத்துப் பாடுகள் இனிவரபோகிற மகிமைக்கு எவ்விதத்திலும் ஒப்பிடத்தக்கவைகள் அல்லவே. பரம வாசஸ்தலத்தை தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறோம்’ என்று சொல்லப்படுகிறது. அவன் எப்போதும் பரலோகமே என் சொந்தமே என்று காண்பேனோ, என் இன்ப இயேசுவை என்று காண்பேனோ’ என்று அனுதினமும் வாஞ்சித்து பாடுகிறவனாய்க் காணப்படுவான். உலகமும் அதின் ஆசை இச்சைகளும் ஒழிந்துபோம்.