“அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15). 

என்ன ஒரு உறுதியான சார்ந்துகொள்ளுதல்! யோபு தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பாடுகளை உபத்திரவங்ககளை அனுபவித்துகொண்டிருந்த வேளையில் இவ்வாறு அவன்  கூறினான். அவன் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டான். தன் பிள்ளைகளையும் சொத்துக்களையும் இழந்துவிட்டான். தன்னுடைய மனைவியும் அவனுக்கு ஆதரவாக இல்லை. தன் சரீரம் முழுவதும் பருக்களால் பாதிக்கப்பட்டான். ஆனாலும் அவன் தேவனை உறுதியாய்ச் சார்ந்துகொண்டான். நம்முடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் நம் சுயத்தை நம்புகிறோம். அதுவே நம்முடைய தோல்விக்குக் காரணமாகவும் இருக்கிறது. மேலும் யோபு “அவரே என் இரட்சிப்பு” என்று சொல்லுகிறான். தேவன் மாத்திரமே நம்முடைய வாழ்க்கையில் இரட்சிப்பு. அநேக வேளைகளில் அதை நாம் மறந்துவிடுகிறோம். யோபு தன்னுடைய வாழ்க்கையில் கைவிடப்பட்டுவிட்டாரா? இல்லை. அவனுடைய வாழ்க்கையின் முன்னிலைமையைக் காட்டிலும் அவன் பின்னிலைமையை ஆண்டவர் உயர்த்தினார். இழந்துபோன எல்லாவற்றையும் அவன் மறுபடியும் பெற்றுக்கொண்டான். நம்முடைய வாழ்க்கையில் நாம் கடந்துபோகக் கூடிய சூழ்நிலைகள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், நாம் தேவனைச் சார்ந்து கொள்ளுவோம். அவருடைய அன்பு மாறாதது. அவருடைய இரக்கத்திற்கு அளவில்லை. அவருடைய கிருபைக்கு முடிவில்லை. இந்த நல்ல தேவனை விட்டு நாம் எங்கே போவோம்? அவரைச் சார்ந்துகொள்ளுதலை நாம் விட்டுவிட்டால் நமக்குப் பிரிதொரு நம்பிக்கை உண்டோ? யோபுவைப் போல  நம் சோதனை நேரத்தில் அவரையே நாம் சார்ந்து அவருக்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிப்போம். அப்பொழுது தேவன் நம்முடைய வாழ்க்கையில் செயல்பட்டு அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படியாக நம்மை உயர்த்துவார்.