கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 12                                   நமக்காக வேண்டுதல் செய்கிறார்                           ரோமர் 8 : 30 – 39

‘அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.’ (ரோமர் 8 : 34)

அதாவது நம்முடைய பட்சத்தில் நமக்கு உதவும்படி பரிந்து பேசுகிறார் என்று அர்த்தம். ஆம்! தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் எவ்வளவு பெரிய சிலாக்கியம் பாருங்கள். அவர் நிறவேற்றின பலியினிமித்தம் சாத்தானின் குற்றசாட்டுகளுக்கும், நியாயபிரமானத்தின் குற்றசாட்டுகளுக்கும் நம்மைக் காத்து பாவங்களை மன்னித்து நம்மைத்க் தொடர்ந்து பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு பராமரிக்கிறார்.  தம்மால் தெரிந்துக் கொள்ளப்பட்ட அனைவருக்காகவும் பிதாவின் வலதுபாரிசத்தில் இயேசு ஆண்டவர் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

இது ஒரு விசுவாசிக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையைக்  கொடுக்கிறது! அவர் செலுத்தின பலியின்மேல் முழு நம்பிக்கை வைத்து, தேவனை தன்  ஆத்துமாவின் அனைத்திற்கும் சார்ந்து கொள்ளுகிற ஒவ்வொரு பிள்ளையும், தனக்காய் பிதாவின் வலதுபாரிசத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிற தன் ஆண்டவர் எவ்வளவு அன்புக்குறியவர் என்பதை விள்ங்கிக்கொள்ள முடியும். சாத்தான் உன்னை எவ்வளவுதான் தாக்கினாலும்; ஆவிக்குறிய கடுமையான யுத்தத்தில் நீ காணப்பட்டாலும்; இந்த மேலான நம்பிக்கை உன்னை இன்னுமாய் பெலப்படுத்தட்டும்.

மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றும்முடிய இரட்சிக்க வல்லவருமாயிருக்கிறார். (எபிரேயர் 7 : 25 ) தான், எவர்களை இரட்சிக்கிறாரோ அவர்களை நடுவழியில் கைவிடுவதில்லை. உன்னை முற்றும்முடிய இரட்சிக்கிறார். ஒருவேளை நீ பெலவீனனிலும் பெலவீனனாக இருக்கலாம். அவருடைய இரட்சிப்பு உன்பெலத்தைச் சார்ந்தது அல்ல. அது முற்றிலும் அவருடைய பெலத்தை சார்ந்தது. அவர் உன்னை முடிவுபரியந்தம் காத்து வழி நடத்த வல்லவராய் இருக்கிறார். அவர் இந்த இரட்சிப்பின் பாதையில் நீ அனுதினமும் காக்கப்பட, பரிசுத்தமாக்கப்பட, முடிவுபரியந்தம்  உனக்காக வேண்டுதல் செய்கிறார். ஆண்டவர் உனக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்!