செப்டம்பர்   18                                         துக்கம்                                                    2 கொரிந்தியர் 7 : 1 – 10

ேவனுக்கேற்ற துக்கம் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது, லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது’ (2 கொரிந்தியர் 7 : 10)

ஒன்று ஜீவனுக்கேதுவானது, மற்றொன்று மரணத்துக்கேதுவானது. உன்னை எந்தத் துக்கம் ஆளுகை செய்கிறது என்பதை சிந்தித்துப்பார். லௌகிக துக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். அதாவது உலகத்துகுரிய துக்கம். ‘என்னத்தை உன்போம் என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம்’ (மத் (6 : 31) இன்னும் சொல்லப்போனால் என்னத்தை சேர்ப்போம் என்பது இன்னுமொரு கவலை. திருப்தியற்ற இருதயம். உலகத்தையும் உலக மனிதர்களையும் நோக்கிப் பார்த்து அவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்வது. அவர்களுக்கு முன்பாக தாங்கள் உயர்வாகக் கருதப்படவேண்டுமே என்ற கவலை. வருங்காலத்தில் என்னுடைய பிள்ளைகளுக்கு என்னத்தை சேர்த்து வைப்பேன் என்ற கவலை. தேவன் உன்னை ஆசீவதிப்பாரானால் அதற்காக தேவனுக்கேற்றபடி திட்டமிடுவதில், தவறில்லை ஆனால் கவலைபடுவது தவறு.

உலகக்கவலை அல்லது துக்கம் உன் விசுவாசமற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. கவலை ஒரு பாவம். அது அவ்விசுவாசம் என்ற பாவத்தின் பிள்ளை. அது என்ன விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை அறிந்துக்கொள்.

முதலாவது, அது உன் இருதயத்தை ஒடுக்கும். (நீதி 12 : 25 ) அது உன் இருதயத்தை அதிகமாக கடினப்படுத்தும். மிருதுவான தன்மையை இழக்கச்செய்யும். கல்லான இருதயத்தின் குணங்களை வெளிப்படுத்தும். கடின இருதயம் தேவனுடைய வார்த்தைக்கு இணங்க மறுக்கும்.

இரண்டாவதாக, அது தேவ வசனத்தை உன்னில் நெருக்கிப்போட்டு, பெலனற்றுப் போகச்செய்யும். விசுவாசம் தேவ வசனத்தை கேட்பதால், விசுவாசிப்பதால், தியானிப்பதால் வரும். ஆனால் உலக கவலை, துக்கம், உன் மனதினில் என்னதான் தேவனுடைய வசத்தை கேட்டாலும் அது பிரயோஜனமற்றதாய்ப் போகும். அது உன் ஆத்தும மரணத்துக்கேதுவாக உன்னை வழிநடத்தும். ஜாக்கிரதையாயிரு.