செப்டம்பர்   9                                            தாழ்மை                                                      யாக்கோபு 4 : 1 – 10

‘கர்த்தருக்கு முன்பாக தாழ்மைபடுங்கள் (யாக் 4 : 10)

இந்த உலகத்தில் மனிதன் தன்னை தாழ்த்துவதை விரும்புவது இல்லை. தாழ்த்துவது ஒரு கசப்பான காரியம். தாழ்மைபடுவது என்பது சுயத்தை அழிப்பது. இயற்கையான மனிதனில் இது ஒரு இம்மி அளவுக்கூட கிடையாது. ஆனால் பெருமையோ கடலளவு இருக்கிறது. இது எவ்விதம் மனிதனுக்கு வந்தது? ஆதிப் பெற்றோராகிய ஆதாம், ஏவாளிடத்திலிருந்து நாம் சுதந்தரித்துக் கொண்டது. இது ஒரு மலையைப் போன்றது. இதை உடைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

`           பெருமை தேவனுக்குறியதல்ல. அது உலகத்துக்குறியது. உலகத்தில் உள்ள மூன்று காரியங்களில் ஒன்று ‘ஜீவனத்தின் பெருமை’ என்று சொல்லப்படுகிறது’. ( 1 யோவான் 2 : 16 )

    மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

இது பிசாசினால் உண்டானது. பெருமையினால் ஏதாகிலும் மேன்மை உண்டா? பெருமை மனிதனைவிட்டு மனிதனை பிரிக்கிறது. சண்டை சச்சரவுகளை உண்டாக்குகிறது. கடைசியில் அழிவை ஏற்படுத்துகிறது. பெருமை நரகத்தின் வாசலும், வழியுமாக இருக்கிறது. பெருமயுள்ளவனுக்கு தேவனே எதிர்த்து நிற்கிறார். சொல்லப்போனால் பெருமையுள்ளவன் தேவனை எதிர்த்து நிற்கிறான். பெருமையுள்ளவன் இருதயத்தில் சமாதானம் கிடையாது.

ஆதாம், ஏவாள் மூலம் சுதந்தரித்துக்கொண்ட பெருமையினால் தேவனை, அவருடைய வழியை எதிர்த்து நிற்கிறாய். பெருமையுள்ளவன் எப்போதும் பிசாசுக்குச் செவிகொடுத்து தேவனுக்கு முன்பாக கலகம் செய்த ஆதாம் ஏவாள் வழியில் நடக்கிறான். பெருமையின் விளைவு என்ன? அதனால் ஆதாம் ஏவாள் மாத்திரமல்ல அவன் சந்ததியாகிய நாம் அனைவரும் சுதந்தரித்துக்கொண்டது என்ன? ஆத்தும மரணம், நரக ஆக்கினை. ஆகவே இந்தத் தீர்ப்பு ஒவ்வொரு மனிதனுக்கென்று நியமிக்கப்பட்டு இருக்கிறது.

இதிலிருந்து தப்பிக்கும்படியான ஒரு வழி என்ன? தாழ்மைதான். உன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்தி, ‘பாவியாகிய என்மேல் கிருபையாய் இரும்’ என்று சொல்லுவதுதான். தாழ்த்தும்போது உனக்குக் கிடைக்கும் பலன் என்ன? ‘கிருபை’ ஆம் ‘தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்;. (யாக்கோபு 4 : 6)