“தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” (மீகா 2:13).

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நாம் தடைகளைச் சந்திக்கிறோம். எதிர்ப்புகள் போராட்டங்களை சந்திக்கிறோம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் தேவன் நமக்கு முன்பாகப் போவார் என்றால், அவர் எல்லாத் தடைகளையும் நீக்குகிறவராய் இருக்கிறார். ஒரு தேவனுடைய பிள்ளைக்குக் கிடைக்கும்படியான அருமையான சிலாக்கியம் இது. அவன் தைரியமாய் முன்நோக்கிச் செல்ல முடியும். ஏனென்றால் தேவன் தன்னோடு கூட இருக்கிறார். மேலும் நம்முடைய காரியங்களை அவர் பொறுப்பெடுத்து வழிநடத்துகிறார். அவருடைய கரத்தில் நாம் முழுமையாய் ஒப்புவிக்கும்பொழுது, அவர் அதைப் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். நான் அறிவீனன் பெலவீனன், ஆனால் என் ஆண்டவர் எனக்கு முன்பாக நடந்துபோய்க்கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி செம்மைப்படுத்தி, எல்லாவற்றையும் அவர் அழகாக நன்மையாக வாய்க்கபண்ணுகிறார். ஆகவே நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாழ்க்கையில் தடைகள் ஏற்படுமென்றால், ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள், தடைகளை அகற்றிப் போடுகிற தேவன் உனக்கு உண்டு. அவர் உனக்கு முன்பாகச் சென்று எல்லாத் தடைகளையும் நீக்கிப்போடுவார். உன்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய சமூகம் உன்னைப் பாதுகாக்கும். நீ வெற்றியாய் வாசலில் பிரவேசிப்பாய். உன் கண்கள் தடைகளை நீக்கிப்போடுகிறதைக் கண்டு நீ கர்த்தரை மகிமைப்படுத்துவாய்.