கிருபை சத்திய தின தியானம்

நவம்பர்  27                                               சோதனை                                          1 கொரிந்திய்ர் 10 : 1 – 13

”மனுஷருக்கு  நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை.’ (1 கொரிந் 10 : 13)

சோதனையை வெற்றியுடன் கடந்துச் செல்ல, சோதனையைப் பற்றி வேதம் சொல்லுகிறதை அறிந்திருத்தல் மிக அவசியமானது. அநேகர் சோதனை நேரத்தில் சொல்லுவது என்னவென்றால் ‘எனக்கு மட்டும்தானே இவ்விதமான சோதனை. மற்றவர்களெல்லாம் நன்றாகவே இருக்கிறார்களே!’ இல்லை, வேதம் சொல்வதை நம்பு. அம்மனிதர்களுக்கு நேரிடுகிற சோதனைகளில் ஒன்றுதான் உனக்கு வந்திருக்கிறது. இது வினோதமானது அல்ல. உனக்கு மாத்திரம் புதிது அல்ல. எத்தனையோ தேவ மனிதர்களுக்கும் இவ்விதமான சோதனை வந்திருக்கிறது. அவர்களும் தேவனுடைய பெலத்தால் அதை வெற்றியோடே கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களை தேவன் கைவிடவில்லை. ஆகவே தைரியங்கொள். பிசாசு இவ்விதமான வேளைகளில் மனதில் பலவிதமான சந்தேகங்களை எழுப்பி அதைரியப்படுத்துவான். பல குழப்பங்கள் மனதில் ஏற்படுத்த முயற்சிப்பான். இனிமேல் அவ்வளவுதான் என்று நம்பிக்கையற்று போகபண்ணப்பார்ப்பான். அன்பான சகோதரனே! சகோதரியே! அவனுக்குச்செவிகொடாதே. அவன் பொயனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான்.

இந்த வசனத்தின் அடுத்தப்பகுதி என்ன சொல்லுகிறது என்பதை வாசி. ‘தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார்; உங்கள் திரானிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுங்கூட அதற்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குகிறார்.’ ( 1 கொரிந் 10 : 13) தேவன் உண்மையுள்ளவர் என்ற சத்தியம் உனக்கு அஸ்திபாரமாயிருக்கட்டும். உன்னுடைய பெலத்தினால் சோதனையை மேற்க்கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுவதில்லை. உன்னுடைய பெலத்தினால் தோல்வி உறுதி. தேவனைச் சார்ந்துக்கொள். தேவன் சோதனையைத் தாங்கவும், தப்பிக்கும்படியான வழியையும் உண்டு பண்ணுவார். அது மட்டும் பொறுமையாய் தேவனையே சார்ந்திரு. அநேகமாயிரமான தேவ பிள்ளைகள் இது மெய்யென்று கண்டிருக்கிறார்கள்.