நவம்பர் 7  

      “இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (மாற்கு 10:14).

பரலோக ராஜ்ஜியம் என்பது சிறுபிள்ளைகளைப் போல தேவனை சார்ந்து கொள்ளுவதும், அவர்களைப் போல எளிமையான மக்களுக்கு உரியதாகவும் காணப்படுகின்றது. ஆகவேதான் இயேசு: “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது” (மத்தேயு 5:3) என்று சொன்னார். ஒரு சிறுபிள்ளை தங்கள் பெற்றோர்களை எவ்விதம் சார்ந்துகொள்ளுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். அந்த குழந்தை நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படுவதில்லை. தனக்கு எது தேவையாக இருந்தாலும் தன் பெற்றோரையே நம்பி வாழுகிறது.

      நம்முடைய வாழ்க்கையிலும் அவ்விதமான எளிமையான, தாழ்மையான மனது இருக்குமானால் நாம் பாக்கியவான்கள். இந்த உலகத்தில் இருக்கும்பொழுதே பரலோகத்திற்குரிய சந்தோஷத்தினால் நிரப்பப்பட்டிருப்போம். ஆனால் பொதுவாக மனிதனுடைய இருதயம் எப்பொழுதும் கடினப்பட்டதாகவே காணப்படுகின்றது. “அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு” (மாற்கு 3:5) என்று வேதம் சொல்லுகிறது. அன்பான சகோதரனே! சகோதரியே! உன் இருதயம் எவ்விதம் காணப்படுகின்றது? இறுகிப்போன கடினமான இருதயமா? அல்லது சிறுபிள்ளையைப் போன்ற தாழ்மையுள்ள இருதயமா?

      ஆகவேதான் வேதம்: “இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்தேயு 18:4) என்று தெளிவாகச் சொல்லுகிறது. தாழ்மை மாத்திரமே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க செய்யும். மனதிரும்புதலின் மெய்யான அடையாளமே தாழ்மைதான். சிறுபிள்ளையைப் போன்ற தாழ்மை நமக்குத் தேவை. தாழ்மை பெருமையை உடைக்கும். தாழ்மையைக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியவான்கள்.