பிப்ரவரி 21         கைவிடப்பட்ட நிலை             2 தீமோ 4:9-18

“நான் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக” (2 தீமோ 4:16).

      பவுலின் வாழ்க்கையில் இந்த ஒரு நிலைக்கு தள்ளப்பட்டது சரியானதா என்பதாக நாம் எண்ணலாம். ஆண்டவர் அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையிலும் கூட எல்லாரும் கைவிட்ட ஒரு நிலைகளைக் கடந்து போக அனுமதிக்கலாம். தேவன் அனுமதிக்காமல் நம்முடைய வாழ்க்கையில் நேரிடுவது ஒன்றுமில்லை. வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திலும் நாம் நம்முடைய காரியங்கள் சரிபடுத்தக் கூடாத ஒரு நிலைக்குத் தள்ளப்படலாம். மனிதர்களை நாம் நம்புவது எப்பொழுதும் நிலையானதல்ல. வேதம்: நாசியில் சுவாசமுள்ள மனிதர்களை நம்புவதை விட்டு விடுங்கள் என்று சொல்லுகிறது. நம்முடைய முழு நம்பிக்கையும் தேவன்பேரில் மாத்திரமே இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து வாழ்வது நமக்கு அவசியமானது. ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் மனிதர்களை நம்புவது என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு பிரயோஜனமற்றது என்பதை விளங்கிக் கொள்ளும்படியாகவே தேவன் பலவிதமான சூழ்நிலைகளை நம்முடைய வாழ்க்கையில் அவர் அனுமதிக்கிறார்.

      பவுல் இன்னொரு வேளையிலும் கூட கைவிடப்பட்டதைக் குறித்து எழுதுகிறார். 2 தீமோத்தேயு 1:15-ல் “ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்”. அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் எல்லாரும் மாத்திரமல்ல எல்லா காரியங்களும் நமக்கு கைகூடி வரக்கூடாத நிலைக்குள்ளாக நாம் செல்லும்படியாக தேவன் அனுமதித்தாலும், கர்த்தர் ஒருக்காலும் கைவிடுகிறவரல்ல.

      ‘நான் உன்னைக் கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை’ என்று சொல்லுகிறார். ஆகவே நம்முடைய நம்பிக்கை எப்பொழுதும் மனிதனைச் சார்ந்ததாக இருக்கவே கூடாது. அது ஒருக்காலும் நமக்கு உதவி செய்யாது. தேவனை மாத்திரமே சார்ந்திருக்க வேண்டும். அவருடைய கிருபையினால் மாத்திரமே நாம் பிழைக்க முடியும். மனிதனுடைய எல்லா விதமான எண்ணங்களும் நமக்கு பிரயோஜனமற்றது. தேவனுடைய கிருபையைச் சார்ந்து கொள்வோம் கிருபையினால் மட்டுமே நாம் பிழைத்திருக்கிறோம் என்ற ஆழமான உணர்வு நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்பொழுதும் கொண்டிருப்பது அவசியம்.