“கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்” (உபாகமம் 33:11).

இந்த இடத்தில் தேவ மனிதனாகிய மோசே தான் மரணம் அடையும் முன்னே, இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த பொழுது இவ்விதமாகச் சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் திரளான செல்வம் நமக்கு ஆசீர்வாதமல்ல. நாம் பெற்றிருக்கிற கொஞ்சமும் நமக்குத் திருப்தியளிக்கக் கூடிய விதத்தில் காணப்படுவதே ஆசீர்வாதம். தேவன் கொடுக்கிற ஆசீர்வாதத்தோடு வேதனையைக் கூட்டமாட்டார். அநேக வேளைகளில் திரளான செல்வத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலை பொதுவாக கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் இருக்கிறதைப் பார்க்கிறோம். ஆனால் நாம் நம்முடைய வாழ்க்கையில் விளங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று, நம்முடைய சம்பத்து நமக்குப் பிரயோஜனமான விதத்தில் ஆசீர்வாதமாக இருப்பதற்கு, திருப்தியான விதத்தில் அதை நாம் கையாளுவது ஆண்டவருடைய ஆசீர்வாதமாகும். ஆகவே நாம் அதிகமாய்ப் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அல்லாமல் கொண்டிருப்பதில் திருப்தியாயிருப்பதே நல்லது. அவ்விதமான மனநிலை கர்த்தருக்குப் பிரியமானதை செய்யவும் அவருக்கு ஏற்றதைச் சிந்திக்கவும் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அர்ப்பணிப்போடும் தேவனுடைய ஆசீர்வாதத்தோடும் செய்யும்படியான நம் கிரியைகள் கர்த்தருக்குப் பிரியமாய் இருக்கும். இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, நம்முடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பிரியமான விதத்தில் பெற்றிருக்கும் சம்பத்தையும் ஆண்டவருக்குப் பிரியமான விதத்தில் செலவிடுகிறவனாகவும், அவருக்கு ஏற்ற விதத்தில் அனுபவிக்கிறவனாகவும் வாழுகிற ஒரு மனிதனின் கையின் கிரியைகளும் தேவனுக்கு உகந்ததாகவே இருக்கும். ஏனென்றால் நாம் எதைச் செய்தாலும் ஆண்டவருடைய நாமத்தின் மகிமைக்காகச் செய்ய வேண்டும் என்று வேதம் நமக்குப் போதிக்கின்றது. இந்த உலகத்தில் நாம் பெற்றிருக்கும் அனைத்தும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்று உபயோகப்படுத்தப்பட வேண்டுமேயன்றி, நாம் வெறுமையாக அதில் திருப்தியடைந்து அதை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்வதல்ல. மெய்யான ஆசீர்வாதம் என்பது நாம் கொண்டிருக்கிறவைகளில் திருப்தியடைந்து, போதும் என்ற மனதோடு கொண்டிருக்கிற தேவ பக்தியுள்ள ஒரு வாழ்க்கையே.