“சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (பிரசங்கி 1:14).

சாலமோன் ராஜா, ஒரு மனிதன் அனுபவிக்கக்கூடிய உலகதிற்குரிய இன்பங்களையும் எல்லாவற்றையும் அனுபவித்தப் பின்பாக எழுதப்பட்ட புத்தகம் பிரசங்கி என்று நம்புகிறோம். அவர் சொன்னக் காரியம், எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது என்றே சொல்லுகிறார். இதை சாலமோன் ராஜா மாத்திரமல்ல, நாம் ஒவ்வொருவரும் இதை நம் வாழ்க்கையில் சொல்லக்கூடிய காரியம் என்பதை மறுக்கமுடியாது. இந்த உலகத்தின் காரியங்கள் எதுவும் நம்மைத் திருப்திபடுத்துவதில்லை. அநேக காரியங்களை நாம் எதிர்பார்ப்போடு செய்கிறோம், திட்டமிடுகிறோம். ஆனால் அதைப் பெற்றுக்கொண்ட பின்னர், நாம் எதிர்பார்த்த திருப்தியும் நிறைவும் அது கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக மனசஞ்சலத்தையே அதில் பார்க்கிறோம். இவைகளெல்லாம் எதைக் காண்பிக்கிறது என்றால், இந்த உலகம் நம்மை திருப்திப்படுத்தாது என்பதையே. உலகத்தின் காரியங்கள் நம்முடைய ஆத்துமாவுக்கு ஒருக்காலும் அமைதியைக் கொடுக்காது. ஆண்டவரில் மாத்திரமே நாம் நிறைவும் சமாதானமும் காண முடியும் என்பதை விளங்கிக்கொள்ளவே, இவைகள் நமக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சாலமோன் தன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்தும் இவ்விதமாய் சொன்னக் காரியங்கள் நாம் நம்முடைய வாழ்க்கையில் கற்றுக்கொள்கிற பாடமாக நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. வேதம் நமக்குக் கொடுக்கப்பட்டதின் ஒரு நோக்கம் அதின் மூலமாக நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் உண்டு. ஆவிக்குரிய பிரகாரமாக தேவனுக்குப் பிரியமில்லாதவர்களின் வாழ்க்கையின் முடிவையும், தேவனுக்குப் பிரியமுள்ளவர்களின் வாழ்க்கையின் முடிவையும் நாம் படிப்பதோடு மட்டுமல்லாமல், அதைச் சிந்தித்து நம்முடைய வாழ்க்கைக்கு எவ்விதமாக பொருத்தி வாழ்வது என்பதைக் குறித்து நாம் உணர்ந்து அதின் படி வாழுவது அவசியம். அப்பொழுது நாம் மெய்யான ஆசீர்வாதத்தின் வழியை அறிந்து அதில் நிச்சயமாக திருப்தியடையமுடியும்.