ஆகஸ்ட் :26                                                 காயத்தை குணமாக்குவேன்                                                புலம்பல், 2 : 13 — 22

உங்கள் காயம் சமுத்திரத்தைபோல்
பெரியதாயிருக்கிறதே, உன்னைக்
குணமாக்குகிறவன் யார். (புலம்பல் 2 : 13 )

மனிதன் தன் காயத்தை ஆற்ற தேவனைத் தவிர அநேக வழிகளை தேடுகிறான். இன்றைக்கு சிலர் தங்களுடைய காரியங்களுக்கு சரியான மருத்துவரிடம் செல்லாமல், மருத்துவத்தை முறையாகப் படிக்காத சிலரிடம் செல்லுகிறார்கள். அவர்கள் மருத்துவத்தை முறையாக படிக்காமல், அனுபவம் என்று பெயர் சொல்லி, இவ்விதம் சிகிச்சைப் செய்கிறார்கள் அதன் விளைவாக காயம் மேலும் மேலும் அதிகமாய் பாதிக்கிறதே ஒழிய குணமாவதில்லை. காயத்தின் வேதனை இன்னும் பெருகிக்கொண்டிருக்கிறதே ஒழிய சற்றேனும் ஆறுவதில்லை

நம்முடைய ஆத்துமாவின் காயத்தையும் நாம் அவ்விதமாகவே குணப்படுத்தப் பிரயாசப்படுகிறோம். நம் ஆத்துமாவின் மெய்யான பரிகாரியகிய இயேசுவினிடத்தில் செல்லாமல் மற்றவர்களிடம் செல்லுகிறோம். அநேக மனித முறைமைகளில் நம் ஆத்தும காயத்தை ஆற்றப் பிரயாசப்படுகிறோம். அது இன்னும் நம்முடைய ஆத்துமாவை வேதனைப்படுத்துகிறதே ஒழிய இன்னும் குணமாவதில்லை. நம்முடைய உண்மையான ஆத்தும நிலையை, தேவனுடைய வார்த்தை இவ்விதம் விவரிக்கிறது. ‘தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி, உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ்பிதுக்கப்படமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. (ஏசாயா 1 : 6 , 7 )

அன்பானவர்களே! உன்னுடைய காயம் சமுத்திரத்தைப்போல பெரியதாயிருக்கலாம். ஆனால் நமது இரட்சகர் இயேசுவினால் ஆற்றப்படமுடியாத காயம் ஒன்றுமில்லை. நம்முடைய பாவம் எவ்வளவு கொடியதாயிருந்தாலும் இயேசு ஒருவரே அதை நீக்கமுடியும். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைபோல வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பாரச் சிவப்பாய் இருந்தாலும் பஞ்சைப்போலாகும்’ (ஏசாயா 1 : 18 ) இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும் என்பதை மறவாதே.