கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 19                                                           கர்த்தருடைய வேதம்                                      சங் 19 : 1 – 10

‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது ஆயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியம் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.’         (சங்கீதம் 19 : 7)

 

ஆங்கிலத்தில் வேதம் பரிபூரணமானது என்று பார்க்கிறோம். அதில் குறை ஒன்றும் இல்லை. உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் தேவனுடைய வார்த்தையில் இருக்கிறது. தேவனுடைய வார்த்தையை அநேகர் இன்று அவ்விதம் அறியாததினால் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு அப்பார்பட்டக் காரியங்களை நாடி ஓடுகிறார்கள். ஆவிக்குரிய தாகத்தை உணர்ச்சியூட்டும் பலவித தேவனுடைய வார்த்தைக்கு ஏற்றதல்லாத அநேகக் காரியங்களைத் தேடி ஓடுகிறார்கள். நீ தேவனுடைய வார்த்தை உன் எல்லா ஆவிக்குரிய பாதைக்கும் போதுமானது என்ற உணர்வோடு தேவனுடைய வார்த்தையண்டை வருகிறாயா? நீ அவ்விதம் வருவாயானால் நிச்சயமாய், வெறுமையாய் போகமாட்டாய்.

தேவனுடைய வார்த்தை ஆத்துமாவை உயிர்பிக்கிறதாய் இருக்கிறது. மரித்துப்போன ஆத்துமாவை தேவ வார்த்தையைக் கொண்டு தேவ ஆவியானவர் உயிர்பிக்கிறார். பேதுரு நிருபத்தில் தேவ வார்த்தையின் உயிர்பித்தலை இவ்விதமாய் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். ‘அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே ஜெனிபிக்கப்பட்டிருக்கிறிர்களே.’ (1 பேதுரு 1 : 23) தேவனுடைய வார்த்தை ஒரு ஆத்துமா உயிர்பிக்கப்படுதலில் கருவியாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் சபைகளில் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பது முக்கிய இடத்தை வைக்கவேண்டும். ஆனால் பரிதாபமான காரியம் என்னவென்றால் பாடல்களும், சாட்சிகளும் மற்றவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தேவனுடைய வார்த்தையைப்  பிரசங்கிப்பதற்கு  முதலிடம் கொடுக்கப்படுவதில்லை. இவ்விதமான சபைகளில் ஆத்துமாக்கள் மெய்யான ஆவிக்குரிய போஷாக்கைப் பெறுவதில்லை.