கிருபை சத்திய தின தியானம்

நவம்பர் 17                                    எண்ணிமுடியாத அதிசயங்கள்                            யோபு  9 : 1 – 10

‘ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.’ (யோபு 9 : 10)

நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர். அவர் நாமத்தில் விசுவாசம் வைக்கிற, அவரை சார்ந்து ஜீவிக்கிற, ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்றும் ஆராய்ந்துமுடியாத அதிசயங்களை செய்துவருகிறார் என்பதை உணரமுடியும். மோசே இஸ்ரவேல் மக்களைப்பார்த்து இவ்விதம் சொன்னார், ‘அவரே உன் புகழ்ச்சி, உன் கண்கண்ட இந்த பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே. உன் தேவனாகிய கர்த்தருக்கு பயந்து அவரைச் சேவித்து அவரைப் பற்றிக்கொள் என்றார். (உபா 20 : 21)

நாம் நம்முடைய ஒவ்வொரு அடியிலும், தேவனுடைய கரத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும். விசுவாச வாழ்க்கை என்பது தேவன் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுகிறார் என்பதை முழுமையாய் நம்பி செயல்படுகிற வாழ்க்கை. அவ்விதமான வாழ்க்கையில் தேவன் நடத்தும் ஒவ்வொரு நடத்துதலிலும் எவ்விதம் ஆச்சரியமானவராக செயல்படுகிறார் என்பதை காணமுடியும். இதுவே மெய்யான கிறிஸ்துவ வாழ்க்கை.

ஒரு கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்குள்ளான சிந்தையை கொண்டிருக்கிறவனாய் மாத்திரமல்ல, கிறிஸ்துவுக்குள்ளாய் சிந்திக்கிறவனாயும் இருப்பான். சாமுவேல் தீர்க்கதரிசி இஸ்ரவேல் மக்களைப் பார்த்து என்ன சொன்னார் பாருங்கள். ‘நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களை செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.’ (1 சாமு 12 : 24 ) ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும், தேவன் எவ்விதம் மகிமையாய் செயல்படுகிறார் என்பதைச் சாட்சியிட முடியும். அவ்விதமான காரியங்களைச் சிந்தித்து தேவனுக்கு நன்றி செலுத்து. தேவனுக்கு அது மகிமையாயிருக்கும். எதிர்காலத்தை நம்பிக்கையோடே சந்திக்க அது உனக்கு உதவும்.