“அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது” (மாற்கு 15:25).
நாம் சிலுவையை நோக்கிப் பார்க்கும் பொழுது அதன் மூலமாக நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல உண்மைகளைப் பார்க்க முடிகிறது. அதில் தேவனுடைய மிகப்பெரிய அன்பைப் பார்க்க முடிகிறது. இவ்வளவாய் அன்புகூர்ந்தார் என்கிற அன்பின் உச்சத்தை அங்கு நாம் காண்கிறோம். மிகப்பெரிய ஒரு பலியை, தியாகத்தை நாம் அங்கு பார்க்கிறோம். ஆம்! இந்த அன்பு, கிரயம் செலுத்தின அன்பு. சிலுவையில் தன்னையே ஒப்புக்கொடுத்ததின் மூலம் நாம் அதைப் பார்க்கிறோம். மிகப்பெரிய பாவிக்கும் இயேசுவின் மரணம் நம்பிக்கையளிக்கக் கூடிய ஒன்று. தன் பாவத்தை நீக்க எந்தவொரு வழியும் இல்லாத போது, சிலுவை ஒரு பாவிக்கு மிகப்பெரிய நம்பிக்கை. ஒரு மனிதன் இரட்சிக்கப்படத் தேவையான அனைத்தையும் கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றி முடித்து, முடிந்தது என்று சொன்னார். இது ஒவ்வொரு விசுவாசிக்கும் கிடைக்கப்பெற்ற மகத்துவமான அன்பாகும். மேலும் நாம் சிலுவையில் ஆதாம் ஏவாள் பாவத்தின் வீழ்ச்சியின் விளைவாக ஒரே ஒரு பலியாக கிறிஸ்துவின் பலியை ஏற்படுத்தினதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய நீதியுள்ள கோபம் என்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நாம் இந்த சிலுவையின் மூலமாகப் பார்க்கிறோம். ஆம் தேவனின் ஈவாகக் கொடுக்கப்பட்ட இரட்சிப்பை ஒரு மனிதன் புறந்தள்ளி விடுவானானால், அவனுடைய நிலை எவ்வளவு பரிதாபம் என்பதைக் காட்டுகிறது. ஒரு பாவியின் முடிவை இந்தச் சிலுவை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. ஆகவே இந்தச் சிலுவை மரணம் என்பது ஒருவராலும் விளக்கிக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு பாவிக்கு இதுவே மிகப்பெரிய நம்பிக்கை. இயேசுவை நோக்கிப்பாருங்கள்.