செப்டம்பர் 5 ஆரோக்கிய நாவு நீதிமொழிகள் 15 : 1 – 10

‘ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்’ (நீதி., 15 : 4)

ஆங்கிலத்தில், ஒரு முழுமையான நாவு, கனிதரும் மரம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அநேகர் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லியும் தங்கள் பேசும் வார்த்தைகளில் அவ்விதம் வெளிப்படுத்துவதில்லை. இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் உன் வாயின் வார்த்தைகளினால் உன் ஆவிக்குரிய தன்மை வெளிப்படும் என்பதை மறவாதே. உன் வார்த்தைகள் வெறுமையாக காற்றில் கலந்து மறைந்து விடுபடுபவைகள் அல்ல. அவைகள் நன்மைக்கேதுவானவைகளாவோ அல்லது தீமைக்கேதுவானவைகளாகவோ இருக்கும். இதில் ஏதாகிலும் ஒரு காரியத்தை நிறைவேற்றும். வீண் வார்த்தைகள் தீமைக்கேதுவானவைகள். ‘உங்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் ஒன்றும் வரக்கூடாது’ என்று வேதம் சொல்லுகிறது. நீ பேசும் வார்த்தைகள், விசுவாச வார்த்தைகளாக இருக்கட்டும். அது தாழ்மயான வார்த்தையாக இருக்கட்டும். அது தாழ்மையான கிறிஸ்துவை உன்னில் வெளிப்படுத்தும். அது அன்பு நிறைந்த வார்த்தைகளாக இருந்தால், தேவ அன்பு அதில் வெளிப்படும்.

மரம் கனிகளால் அறியப்படும் என்று வேதம் சொல்லுகிறது, இது இரண்டு விதமான காரியங்களால் வெளிப்படும். ஒன்று வார்த்தைகளால், மற்றொன்று செய்கைகளால். உன்னுடைய வாயின் நல்வார்த்தைகள் என்ற கனி மற்றவர்களுக்கு ஜீவனைக்கொடுக்கும், பெலப்படுத்தும், நம்பிக்கையூட்டும். உன் வாயின் வார்த்தைகளைக்குறித்து, எப்போதும் ஜாக்கிரதையாயிரு. பேசுவதற்கு முன் யோசித்து பேசு. அதன் விளைவுகளைக் குறித்து எண்ணிப்பேசு. தவறான பேச்சு சாட்சியை சீக்கிறத்தில் கெடுத்துவிடும். ‘பக்திவிருத்திக்கேதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்க்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்’ (எபேசியர் 4 : 29) நாவை அடக்காதவன் தன் இருதயத்தை வஞ்சித்துக்கொள்ளுகிறான் என்று வேதம் சொல்லுகிறது.