அக்டோபர் 19       

“அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக் களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” (ஏசாயா 51:11)

                   பாபிலோன் தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட யூத மக்களுக்கு ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்ட வசனமாகக் காணப்பட்டாலும், நித்திய பரலோக ராஜ்ஜியத்தில் தேவமக்கள் பிரவேசிப்பதையும், இது குறிக்கிறது. இவர்கள் கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள். வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், தமது குமாரனுடைய சொந்த இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள். தேவ கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தவர்கள், நித்திய அன்பினால் மீட்க்கப்பட்டவர்கள். உளையான சேற்றிலிருந்து மீட்கப்பட்டவர்கள். அழிவின் பாதையிலிருந்து மீட்கப்பட்டவர்கள். இன்னும் கணக்கிலடங்காத அநேக பயங்கரங்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள்.

              மீட்கப்பட்டவர்கள் எவ்விதம் சீயோனுக்கு, பரலோகத்திற்கு வருவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. “ஆனந்த களிப்புடன் சீயோனுக்கு வருவார்கள்.” மீட்கப்பட்டவர்கள் இந்த உலகத்தைக் கடந்து பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பது மிகுந்த சந்தோஷமானதாக இருக்கும். சரீர மரணம் அவர்களுக்கு துக்கத்தையும் பயங்கரத்தையும் அல்ல, ஆனந்தக் களிப்பையே கொடுக்கும். அது மாத்திரமல்ல, என்றும் முடிவில்லாத “நித்திய மகிழ்ச்சியில்” பிரவேசிப்பார்கள்.

              மேலும் “சஞ்சலமும், தவிப்பும் ஓடிபோம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தில்தான் எத்தனை சஞ்சலங்கள், துக்கங்கள் காணப்படுகின்றன.” நான் பரதேசியாய்ச்  சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுமாயிருக்கிறது.” (ஆதி 47:9) அன்பானவர்களே! ஒருவேளை நீங்களும் யாக்கோபைபோல சொல்லக்கூடும். ஆனால் தேவன் அவைகள் எல்லாம் ஓடிபோம் என்று சொல்லுவதை நினைத்துத் துதியுங்கள். இன்றைய சஞ்சலத்தில் அமிழ்ந்து போவதை விட நாளைய நித்திய மகிழ்சியில் களிகூறுங்கள். தேவன் மகாப்பெரியவர், அப்படியே செய்வார்.