“ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” (வெளி 2:4).
எபேசு சபையைப் பார்த்து ஆண்டவர் மெச்சிக்கொள்ளதக்கவைகள் இருக்கின்றன. ஆனால் இங்கு ஒரு காரியத்தைக் குறித்து வருத்தத்தோடு பேசுகிறார். நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டுவிட்டாய் என்று சொல்லுகிறார். நாம் நம்முடைய வாழ்க்கையில் அநேக ஆவிக்குரியக் காரியங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும், நாம் ஆண்டவரை நேசிப்பதில் குறைவுபட்டிருப்போம் என்றால், அது மிகப் பெரிதான ஒரு காரியம். அன்பினால் ஏவப்படாது நாம் செய்கின்ற காரியம் அது சரியானதாக இருக்க முடியாது. தேவனோடு கொண்டிருக்கும்படியான உறவு உங்கள் வாழ்க்கையில் எவ்விதமாகக் காணப்படுகிறது? கர்த்தருடைய வார்த்தை உங்களுக்குப் பிரியமானதாக இருக்கிறதா? நீங்கள் ஆதியில் கொண்டிருந்த சந்தோஷமும் உற்சாகமும் உங்கள் வாழ்க்கையில் இப்பொழுதும் இருக்கின்றதா என்று யோசித்துப்பார்க்க வேண்டும். மேலும் “நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்” என்றும் ஆண்டவர் சொல்லுகிறார். ஆனால் நீங்கள் சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. கர்த்தரிடத்தில் உங்களை ஒப்புக்கொடுங்கள். அவருக்கு முன்பாகத் தாழ்த்துங்கள். இழந்து போன சந்தோஷத்தையும் சமாதானத்தையும் திரும்பவும் உங்களுக்குக் கொடுத்து, மேலும் நிறைவாய் உங்களை ஆசீர்வதித்து நடத்துவார்.