“அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும்” (எபேசியர் 3:19).

பவுல் எபேசு திருச்சபை மக்களுக்காக வேண்டிக்கொள்கிற விண்ணப்பத்தில், தேவனுடைய அறிவுக்கெட்டாத இந்த அன்பை அவர்கள் அறிந்துகொள்ள வல்லவர்களாக வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறதை நாம் பார்க்கிறோம். இது மிக முக்கியமான ஜெபம். அவர்கள் ஒரு உன்னதமான ஆவிக்குரிய வாழ்க்கையில் எழும்பவேண்டும் என்ற எண்ணத்தோடு பவுல் அவர்களுக்காக ஜெபிக்கின்றார். அறிவுக்கெட்டாத இந்த தேவ அன்பை, நான் என்னுடைய வாழ்க்கையில் எவ்விதம் அறிந்து கொள்வது என்பது மிக முக்கியமான ஒரு காரியம். பொதுவாக என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்துக்கொண்டிருக்கிற ஒரு காரியம், எவ்வளவும் தகுதியில்லாத எனக்கு ஆண்டவர் இவ்விதமான ஒரு பெரிய அன்பைக் காட்டியிருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்த வேளையில், கர்த்தர் என்னைத் தேடி வந்து இரட்சித்தார். முற்றிலும் தகுதியில்லாத என்னை அவர் இரட்சித்தார் என்ற உணர்வு எப்பொழுதும் இருக்கும்பொழுது மாத்திரமே, தேவனுடைய அன்பை அதிகமாக ருசிபார்க்க முடியும் என்பதை அறிந்திருக்கிறேன். அந்த உணர்வும் எண்ணமும் என்னக்குள் இல்லாமல் போகும்பொழுது, ஆண்டவருடைய அன்பை அறிந்துகொள்வதில் நான் வளராமல், அதில் குறைவுள்ளவனாய் இருக்கிறேன் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும்பொழுது, நாம் நம்முடைய சுயத்தைச் சார்ந்து கொள்ளாதபடிக்கு அவர் நமக்கு உணர்த்துகிறார். நாம் எந்தளவுக்குச் சுயத்தை சிலுவையில் அறைந்து கொண்டேயிருக்கிறோம்? கிறிஸ்துவோடுகூட  நம்முடைய சுயம் சிலுவையில் எந்தளவுக்கு அறையப்பட்டுக் கொண்டேயிருக்கிறதோ, அந்தளவுக்கு அவருடைய உயர்தெழுதலின் வல்லமையை அறியும்படிக்கு மகத்துவமான தேவ கிருபையில் வளரவும், வாழவும் காணப்படுவோம். அதுவே அவருடைய அன்பை அறிந்து வாழுகிற அருமையான வாழ்க்கை.