கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 28                    நாமோ இரட்சிக்கப்படவில்லை        எரேமியா 8:1-22

“அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது,
நாமோ இரட்சிக்கப்படவில்லை” (எரேமியா 8:20).

      அருமையானவர்களே ஆண்டு ஆண்டு காலங்களாக தேவன் நம்முடைய வாழ்க்கையில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து நாம் இரட்சிக்கப்பட வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் தம்முடைய கிருபைகளினிமித்தமாக, இரக்கத்தினிமித்தமாக நம்மை வழி நடத்துகிறார். ஆனாலும் இன்னும் அநேகர் தாங்கள் இரட்சிக்கப்படாமலே தங்களுடைய காலங்களை கடத்தி செல்லுகிறார்கள். ஆண்டவர் எப்பொழுதும் நம்முடைய இருதயக் கதவை தட்டுகிறவராகவே இருக்கிறார். பல சந்தர்ப்பங்களின் மூலமாக, நம்முடைய வாழ்க்கையில் நெருக்கப்படுகின்ற பல சூழ்நிலைகள் மூலமாக கர்த்தர் நம்மோடு பேசுகிறவராகவே இருக்கிறார். இரட்சிப்பின் அவசியத்தைக் குறித்து அவர் உணர்த்துகிறார்.

      ஆனால் நாமோ நம்முடைய செவிகளை விலக்கிவிடுகிறோம். இந்த எரேமியா தீர்க்கதரிசி தேவனுடைய இருதயத்தின் கதறலை வெளிப்படுத்துகிறார். அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை. அருமையானவர்களே இரட்சிப்பு என்பதை நீ அற்பமாக எண்ணுகிறாயா? நீ இரட்சிப்பை புறக்கணிப்பது என்பது, உன் ஆத்துமாவை நீயே தற்கொலை செய்கிறாய். வேதம் தெளிவாக சொல்லுகிற ஒரு உண்மை, “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்று இருப்போமேயானால்…” . உங்கள் வாழ்க்கையில் இரட்சிப்பைக் குறித்து கவலையற்று காணப்படுகிறீர்களா?

       இன்றைக்கும் தேவன் இந்த வார்த்தைகளின் மூலம் நம் கதவை தட்டுகிறார். ஆனால் நாமோ திறக்க மறுக்கிறோம். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்” (லூக்கா 13:25) என்று சொல்லுகிறார். இன்றைக்கு நீ மனதிரும்பி உன் வாழ்க்கையை தேவனுக்கு திறக்கவில்லை என்றால், ஒரு நாள் தேவன் தன்னுடைய கிருபைகளின் கதவுகளை அடைத்துவிடுவார். இதை நீ நினைவில் கொள். ஜாக்கிரதையாக மனந்திரும்பி இரட்சிப்பைப் பெற்றுக்கொள். இதுவே தேவனுக்கு முன்பாக நன்மையையும், சந்தோஷமுமாய் இருக்கும்.