சோர்ந்துபோகாமல் ஜெபம்பண்ணவேண்டும்

கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 20         சோர்ந்துபோகாமல்  ஜெபம்பண்ணவேண்டும்          லூக்கா18:1-8

“சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்” ( லூக்கா18:1).

      நம்முடைய வாழ்க்கையில் சாத்தான் வல்லமையாய் செயல்படுத்தும் கருவி சோர்ந்து போகுதல். நாம் சோர்ந்து போவோமென்றால், நம்முடைய ஜெப வாழ்க்கை குன்றிவிடும். ஒருக்காலும் நாம் சோர்வுக்கு இடம் கொடுக்கக்கூடாது. சோர்ந்துபோகாமல் நாம் செய்ய வேண்டியது என்ன? ஜெபிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவோடு கூட நாம் ஐக்கியமுள்ளவர்களாய், அவரோடு கூட நம்முடைய எல்லாக் காரியங்களையும் பகிந்துகொள்ளுபவர்களாய் ஜெபிக்க வேண்டும். நம்முடைய சோர்வையும் கூட அவரிடத்தில் எடுத்துச் சொல்லி, நாம் ஜெபிக்க வேண்டும்.

        சங்கீதக்காரன், “நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்”  (சங் 55:16) என்று சொல்லுவதைப்  பார்க்கிறோம் . ஜீவனுள்ள நம் தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் என்பதை மறந்துவிடாதே. அவர் நிச்சயமாக உன் ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் தேவனே சொல்லியிருக்கிறார், “அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்” (எரேமியா 29:12). இந்த தேவன் ஜெபத்தை கேட்கிறார்.

     ஆகவே நம்முடைய வாழ்க்கையில் ஜெபத்தில் மாத்திரம் தளர்வு என்பதை அனுமதிக்கக்கூடாது. பவுல், “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” (1தெச 5:17) என்று சொல்லுகிறார். தொடர்ச்சியாக நம்முடைய வாழ்க்கையில் ஜெபத்தில் தரித்திருக்க வேண்டும். தேவனிடத்தில் எப்பொழுதும்,  போக்கிலும், வரத்திலும், இடைவிடாமல் நம் இருதயத்தை ஊற்றி ஜெபித்து மற்றாடுவோம். ஆகவேதான் பவுல் “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்” (ரோமர் 12:12) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். ஜெபத்திலே உறுதியைப் பற்றிக் கொள்ளுவோம். இந்த ஜீவனுள்ள தேவனோடு கொண்டிருக்கும் ஐக்கியத்தின் மிக முக்கியமான ஒரு செயல் ஜெபம். ஜெபத்தில் ஒருக்காலும் நாம் பின்வாங்கக் கூடாது.

You may also like...

Leave a Reply