கிருபை சத்திய தின தியானம்

ஆகஸ்ட் 2    உமது சாயலால் திருப்தியாவேன்     சங் 17 : 1 – 15

“நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்;

நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்”(சங் 17 : 15)

    இந்த உலகில் ஒரு கிறிஸ்தவன், ஆண்டவராகிய இயேசுவை தரிசிக்கிறவனாக வாழுகிறான். இது அவனை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவன் வாழ்க்கையின் ஒவ்வொன்றிலும் அவருடைய திட்டத்தை, வழியைப்பார்க்கும் பொழுது தன்னை வழிநடத்துகிற தேவனைக் காண்கிறான். அவருடைய முகம் அவ்வப்பொழுது மறைக்கப்பட்டு போகும் வேளைகளும் உண்டு. அவன் அவரை இந்த உலகத்தில் கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்ப்பது போல பார்க்கிறான். ஆனாலும் ஒரு நாளில் அவர் இருக்கிறவண்ணமே அவரைப் பார்ப்பேன் என்கிற நம்பிக்கையோடு வாழ்கிறான். இதை அவன் ஒரு சிறிய பரலோகமாகவே உணருகிறான்.

    ஆனால் உலக மனிதன், இந்த உலகத்தில் அநேக உலகக் காரியங்களில் நோக்கமுள்ளவனாகக் காணப்பட்டாலும் அவன் வாழ்க்கை நோக்கமற்றதே. இந்த உலகத்தில் அவன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவைகள் அவனுக்கும் அவன் ஆத்துமாவுக்கும் ஒரு துரும்பாகிலும் உதவாது. அவன் இந்த உலகில்பெற்ற அனைத்தும் அவனைப்பார்த்து அவனின் முடிவு வேளையில் சிரிக்கும். பிசாசும் கூட சிரிப்பான். இவனைப்போன்ற ஒரு மதிகேடன் உண்டா? இவன் இன்று வரை உலகத்திற்காகவே வாழ்ந்தான். இன்று இந்த உலகத்தை விட்டு கடந்துபோகிறான். ஆனால் அவன் வரப்போகிற உலகத்திற்கென்று என்ன சேர்த்துவைத்திருக்கிறான்?.

    ஆனால் மெய்யான ஒரு விசுவாசி இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் அவன் நித்திய கணக்கீட்டிலேயே வாழுகிறான். அவருடைய சாயலை அவ்வபொழுது மாத்திரமே இந்த உலகில் காணுகிற அவன், ஒரு நாளில் இந்த உலகத்தைக் கடந்து செல்லுகிற வேளையில் அவன் அவரை இருக்கிறவண்ணமாகவே காண்பான். அது அவருடைய சாயலுக்கு ஒப்பாக அவன் சாயலும் மாறியிருப்பதைக் காண்பான். அது அவனுக்கு மெய்யான திருப்தியைக் கொடுக்கும். அன்பானவரே! உன்னுடைய நிலைமை என்ன?