கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 17                         மெய்யாலும்  தேவவசனம்                     1 தெச 2 : 1 – 13

’நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யகவே தேவ வசனம்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனம் செய்கிறது.’ (1தெச 2 :13)

            தெசலோனிக்கேயர் சபைமக்களுடைய வாழ்க்கை உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. பவுல் அவர்களில் காணப்பட்ட மூன்று காரியங்களின் அடிப்படையில் அவர்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் என்று கூறுகிறதைப் பார்க்கிறோம். அவைகள் 1. விசுவாசத்தின் கிரியை 2. அன்பின் பிரயாசம் 3. கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் பொறுமை. (1 : 2) இந்த மக்கள் ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினவர்கள். (1: 9) மிகுந்த உபத்திரவத்தை கடந்துவந்தவர்கள். சுய ஜனங்களாலே பாடுபட்டவர்கள்’ (2 : 14) ஆனால் இவைகளின் மத்தியில் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தால் நிறைந்திருந்தார்கள். இன்றைக்கு அநேகர், சிறு கஷ்டங்கள் வந்தாலும் உடனே ஆண்டவரைப் பின்பற்றுகிறதினால் எங்களுக்கு உபத்திரவங்கள் என்று முறுமுறுக்கிறார்கள். அது தவறு. இரண்டாவது, அவர்களுடைய சாட்சி அகாயா, மக்கெதோனியா மக்களுக்கு மாதிரியாய்க் காணப்பட்டது. அம்மக்கள் மத்தியில் இவர்கள் சென்று செய்த ஊழியத்தின் மூலம் கர்த்தருடைய வசனம் அவர்களுக்குச் சென்றதையும் பார்க்கிறோம். (1:7,8)

            இவைகள் அனைத்தின் இரகசியம் என்ன? அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட விதம்தான். இன்றைக்கு அநேகர் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறார்கள், கேட்கிறார்கள். ஆனால் அதை தேவனுடைய வார்த்தையாக ஏற்று விசுவாசிக்காததினால் அவர்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வார்த்தை பலன் அளிப்பது இல்லை. நீ கர்த்தருடைய வார்த்தையை அவ்விதம் ஏற்றக்கொள்ளுகிறாயா? அவ்விதம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட  தெசலோனிக்கேயர் வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது.