கிருபை சத்திய தின தியானம்

மார்ச்:     31           சின்னவன் ஆயிரமாவான்          ஏசாயா 60:12-22

“சின்னவான் ஆயிரம், சிறியவன் பெலத்த ஜாதியுமாவான்,

கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்” (ஏசாயா 60:22)

      நமது தேவன், அற்பமானவைகளிலிருந்து மேலானவைகளை நடப்பிக்கிறவர். தாழ்மையானவைகளைக்கொண்டு உயர்வானவைகளை உருவாக்குகிறார். அவன் சின்னவன், ஆனால் அவனை ஆயிரமாய் பெருகச்செய்வார். சிறியவனை பெலத்த ஜாதியாக்குகிறவர். அவர் நம்முடைய விசுவாசம் அற்பமானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தருமாய் இருக்கிறப்படியால் அவ்விதம் செய்ய வல்லவராயிருக்கிறார்.

      எத்தனையோ மிஷினரிகளை இந்த வாக்குத்தத்தமானது பெரிய காரியங்களை எதிர்ப்பார்க்கும்படி உற்சாகப்படுத்திற்று. அவ்விதமாகவே தேவன் இந்த வாக்குத்தத்தத்தை நிரூபித்தார். ஒரு மிஷினரியின் கல்லரையில் இவ்விதம் எழுதப்பட்டிருந்தது. ‘இவர் இந்த ஊருக்கு வந்த போது கிறிஸ்தவன் ஒருவனுமில்லை.’ ஆனால் இவர் மரிக்கும்போது கிறிஸ்தவன் அல்லாதவன் ஒருவனுமில்லை.’ ஒரு பவுலை இரட்சித்த தேவன், அவர் மூலமாய் எத்தனை ஆயிரக்கணக்கான மக்களை இரட்சித்தார். வில்லியம் கேரி ஒரு எளிய, பழைய செருப்பு தைக்கிறவர். ஆனால் அவரைக்கொண்டு தேவன் நம் தேசத்தில் எவ்வளவு பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்.

     தேவனுடைய ராஜ்ஜியம் எவ்வியதம் வரும் என்பதை இந்த உவமையின் மூலமாய் பார்க்கிறோம். ‘அது கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியதாயிருக்கிறது; விதக்கப்பட்டபின்போ அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரியதாகி ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின் கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும்.’ (மாற்கு, 4 : 31 , 32 ) கர்த்தருக்கென்று செய்யும் பணி மிகச்சிறியதாய் காணப்பட்டாலும் அதை அற்பமாய் எண்ணாதே. விசுவாச கண்களால் தேவன் அதை ஆயிரமாக்குவார், பெரிய ஜாதியாக்குவார் என்று எதிர்பார். ஒரு ஆத்துமாதானே என்று அற்பமாய் எண்ணாதே. தேவன் அந்த ஒரு ஆத்துமாவைக் கொண்டு தம்முடைய இராஜ்யத்தை பெருக்குவார் என்று நீ விசுவாசி.