கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 12    விசுவாசமுள்ளவர்களோவென்று சோதித்துப் பாருங்கள்   2 கொரி 13:1-14

“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று

உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” (2 கொரி 13:5).

      நம் வாழ்க்கையில் நம்முடைய விசுவாசத்தைக் குறித்து நாம் சோதித்து அறிந்துகொள்ளுவது மிக அவசியமான ஒன்று. சங்கீதக்காரன் “  கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்” (சங் 26:2) என்று சொல்லுகிறார். இது நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. நம்முடைய விசுவாச அளவுகளை நாம் நிதானித்து, நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும்படியாக நாம் செயல்பட வேண்டியது மிக அவசியம்.

     ஒருவேளை நம்முடைய இருதயத்தை சோதித்துப்பார்க்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியங்கள் உண்டா? என்பதை குறித்து அறிந்துகொள்ளும்பொழுது, அது நாம் மனந்திரும்புவதற்கு மிக உதவியாக இருக்கும். சங்கீதக்காரன் “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்”(சங் 139:23-24) என்று மன்றாடுவதைப் பார்க்கிறோம்.

       அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் தேவனை துக்கப்படுத்தக்கூடிய, வேதனைப்படுத்தக்கூடிய காரியங்கள் இருக்குமானால், அது கர்த்தருக்குப் பிரியமாக இருக்காது. மேலும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அது ஆசீர்வாதமாக இருக்காது. ஆகவேதான், சங்கீதக்காரன் இங்கு “நித்திய வழியிலே என்னை நடத்தும்” என்கிறார். நித்திய வழியில் நடக்கக்கூடிய மக்களுக்கு, தேவனைத் துக்கப்படுத்தக்கூடிய காரியங்கள் ஏற்புடையதல்ல. நம்முடைய வாழ்க்கையில் அவைகளைவிட்டு தேவன் பக்கமாக திரும்புவது அவசியமானது. எரேமியாவின் புலம்பலில் “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்” (புலம் 3:40) என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். நாம் கர்த்தர் பக்கமாக திரும்புவதற்கும், நித்திய வழியில் நடப்பதற்கும், நம்முடைய வழிகளை சோதிப்பதும், ஆராய்ந்து பார்ப்பதும் மிகமிக அவசியமானது. இது ஆவிக்குரிய பயிற்சி என்பதை நினைவில் கொள்ளவது மிகவும் அவசியமானது.