கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 27               எனக்குள் வாசமாயிருக்கிற பாவம்           ரோமர் 7:1-19

“ஆதலால் நான் அல்ல, எனக்குள்

வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது” (ரோமர் 7:17).

     நமக்குள் மறைந்திருக்கும் பாவத்தன்மையை நாம் எப்பொழுதும் உணர்ந்து வாழுகிற வாழ்க்கையைக் கொண்டிருக்கவேண்டும். அநேகர் தங்களுக்குள் இருக்கும் பாவத்தன்மையை உணராததினால் பாவம் செய்கிறவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் தன்னுள் இருக்கிற பாவத்தன்மையைக் குறித்து உணர்ந்தவர்கள், விழிப்புள்ளவர்களாக, எச்சரிக்கையுள்ளவர்களாக வாழ அது நமக்கு உதவி செய்கிறது. இன்னுமாக பவுல், “அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது” என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

     பவுல் மிகப்பெரிய பரிசுத்தவான், ஆனாலும் கூட தனக்குள் இருக்கும் பாவம் என்கிற தன்மை ஆழத்தில் பதிந்திருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார். ஆனால் அதை கிறிஸ்துவின் மூலம் அதை ஜெயிக்க முடியும் என்று உறுதியாய் சொல்லுகிறார். கிறிஸ்துவின் மூலம் மாத்திரமே நாம் அந்த பாவத்தன்மையை ஜெயிக்க முடியும். நம்முடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் நாம் சுய நம்பிகையுள்ளவர்களாக பாவத்தைக் குறித்த விஷயத்தில் மதியீனமாக செயல்பட்டு விடுகிறோம்.

     அநேகர் பாவத்தில் விழும்படியானவர்கள் நான் விழ மாட்டேன் என்று எண்ணி அதில் துணிகரம் கொள்ளுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏற்கனவே அதில் விழுந்துவிட்டார்கள் என்பது உண்மை. வேதம் மிகத் தெளிவாக போதிக்கிற ஒன்று நமக்குள் பாவம் என்கிற தன்மை நம்மை ஆண்டு வழிநடத்தக் கூடியதாகவே இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நாம் பாவத்தை உணர்ந்து வாழாத பொழுது, பெருமை நம்மை ஆண்டுகொள்ளுகிறதாக இருக்கிறது. பெருமை எங்கிருக்கிறதோ அங்கே பாவம் வாசமாயிருக்கும். தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார். யாக்கோபு எழுதின நிருபத்தில், “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது” (யாக் 4:6) என்று கூறுகிறார். ஆகவே நாம் எந்த அளவிற்கு நம்முடைய பாவத்தன்மையை உணர்ந்து, கர்த்தருடைய கிருபையை சார்ந்து கொள்ளுகிறோமோ, அந்த அளவிற்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வெற்றியுள்ளதாகக் காணப்படும்