கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 7                         பரிசுத்தமாகுதல்                1 தெசலோனிக்கேயர் 4 : 1 – 0

நீங்கள் பரிசுத்த்முள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.’ (தெசலோ 4 : 3)

பரிசுத்தமாகுதல் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கைய்யில் இரட்சிப்பை தொடர்வது பரிசுத்தமாகுதல். ஒருவன் இரட்சிக்கப்பட்டவுடனே நுற்றிலும் பரிசுத்தவானாய் மாறிவிடுவதில்லை. இந்த பரிசுத்தமாகுதலில் ஒரு விசுவாசி, தேவன் கொடுத்திருக்கும் கிருபையின் வழிமுறைகளை உபயோகப்படுத்தி முன்னேறவேண்டும். பேதுரு தமது முதலாம் நிருபத்தில் ‘ஆவியிலே சத்தியத்திற்குக் கீழ்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக் கொண்டவர்களாய் இருக்கிறபடியால் (1 பேதுரு 1 :22) என்று எழுதியிருக்கிறார். ஒரு விசுவாசி ஆவியானவரின் பெலத்தால் முழு ஈடுபாடுடன் பரிசுத்தமாகுதலில் முன்னேறவேண்டும்.

பரிசுத்தமாகுதல் என்பது இரண்டு காரியங்களை உள்ளடக்கியது. ஒன்று, நம்மில் இருக்கிற பாவத்தன்மைகளை அழித்துக் கொண்டேயிருத்தல். இது நம்முடைய வாழ்க்கையில் மரணம் மட்டும் நடை பெறுகிற செயல் கிறிஸ்துவினுடையவர்கள், தங்கள் மாம்சத்தையும் அதின் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.’ (அறைந்திருக்கொண்டேயிருக்கிறார்கள்) (கலா 5 : 24 ) மாம்சத்தின் கிரியைகள் என்ன என்பதை பவுல் கலா 5 : 19, 20, 21ம் வசனங்களில் சொல்லுகிறார். ‘மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகை, விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள்.’ முக்கியமாக உன்னுடைய பழைய வாழ்க்கையில் எந்த பாவத்தில் அதிகம் பலவீனமாயிருந்தாயோ அவைகள் மறுபடியும் மறுபடியுமாக உன்னில் தலைதூக்கி வெளிப்படப் பார்க்கும்.

ஆனால் நீ அவைகளை அவியானவரின் பெலத்தால் அழித்துகொண்டே இருக்கவேண்டும் அதாவது சிலுவையில் அறைந்து கொண்டே இருக்கவேண்டும். பரிசுத்தமாகுதல் என்பது அதோடு மாத்திரமல்ல உன்னில் அதற்குபதிலாக தெய்வீக சுபாவங்களை வளர்த்துக்கொண்டே வரவேண்டும். கிறிஸ்துவின் சாயலில் நீ வளந்து கொண்டேயிருக்க வேண்டும்.