நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்(New)

கிருபை சத்திய தின தியானம் 

ஏப்ரல் 13                   நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்            வெளி 22:1-21

“அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்;

அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்;

நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்;

பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்”(வெளி 22:11).

      அன்பானவர்களே! உலக மனிதனைப் பார்த்து ஒருக்காலும், ஒரு மெய்க் கிறிஸ்தவன் வாழக்கூடாது. தேவனை அறியாத மக்களை நாம் நோக்கிப் பார்ப்போமானால், நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கு அது உதவாது. சங்கீத புஸ்தகத்தில் “ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள்”(சங் 82:11) என்று தேவன் கூறுகிறார். நம்முடைய இருதயத்தின் கடினத்திற்கு கர்த்தர் நம்மை விட்டுவிடுவாரானால், அது எவ்வளவு பயங்கரமான காரியம். தங்களுடைய யோசனைகளின்படி அவர்கள் நடந்தார்கள் என்று சொல்லுவது ஒருக்காலும் நமக்கு பொருந்தாதக் காரியம்.

      கர்த்தருடைய யோசனையை தேடி, அதன்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க  வேண்டும்.  ஆகவேதான் பவுல் கொலோசெயர்க்கு எழுதின நிரூபத்தில் “நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்” (கொலோ 1:22) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம். நாம் கேட்கும் சத்தியத்தின் நம்பிக்கையை ஒருக்காலும் விட்டுவிடக்கூடாது.

    மேலும் யூதா 1:22 –ல் “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்” என்று வேதம் சொல்லுகிறது.கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் போதுமானவர். ஆகவே நம்முடைய வாழ்க்கையில் நாம் இன்னும் நீதியை தேட வேண்டும். இன்னும் பரிசுத்தத்தை நாட வேண்டும். நம்முடைய வாழ்க்கையினுடைய பரிசுத்த அளவுகள் மிகக் குறைவாக இருக்கிறது. அதை எண்ணிக் கர்த்தருக்கு முன்பாக நாம் மனந்திரும்ப வேண்டும். அப்பொழுது கர்த்தர் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களை கட்டளையிடுவார். யோபுவின் சங்கீதத்தில் “நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்” (யோபு 17:9) என்று சொல்லுவதைப் பார்க்கிறோம். நீதிமான் ஆண்டவருடைய வழிகளை உறுதியாய் பிடித்துக் கொள்ளுகிறவன். இது நம்முடைய  ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிக அவசியமானது.

You may also like...

Leave a Reply