பாவங்களை நினைப்பதில்லை

கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 9      பாவங்களை நினைப்பதில்லை    எபி 10 : 1 – 17

அவர்களுடைய  பாவங்களையும் அவர்களுடைய

அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை‘  (எபி  10 : 17).

    தேவன் எப்படி இவ்விதம் சொல்லமுடிகிறது? நாம் நமக்கு எதிராக யாராகிலும் ஒரு சிறிய தவறு செய்துவிட்டாலும் அதை மன்னிக்க முடியாதவர்களாய் தடுமாறுகிறோம். அப்படி மன்னித்தாலும் அதை மறக்கமுடியவில்லை. ஆனால் தேவன் எவ்வளவு வித்தியாசமானவர். அவருக்கு எதிராக நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பது மாத்திரமல்ல அவைகளை மறந்துவிடுவேன் என்றும் சொல்லுகிறார். இந்த உடன்படிக்கையைத் தமது சொந்த மரணத்தினால் நிலைப்படுத்தினார்.

    ஒரு தாய் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தன் குழந்தையைக் காணும்போது அவள் கடந்து வந்த கஷ்டத்தை நினைப்பதில்லை. தேவன் தன்னுடைய பாடுகளின் மூலம் சம்பாதித்த தன் பிள்ளைகளைப் பார்க்கும்பொழுது அதைக் காட்டிலும் அநேகமாயிரம் மடங்குகளாக மகிழ்ச்சியுறுகிறார். அவர்கள் பாவங்களை மன்னித்து மறந்துவிடுகிற தேவன் பிறகும் அவர்களை பாவியாக நோக்குவதில்லை. அவர்களை நீதிமான்களாக நோக்குகிறார், பரிசுத்தவான்களாக நோக்குகிறார். தம்முடைய, சொந்த பிள்ளைகள் என்று அழைக்க அவர் வெட்கப்படுவதில்லை. அவர் நிமித்தம் சந்திரனையும், சூரியனையும், வானமண்டலங்களிலுள்ள அனைத்தையும் அவர்களுக்காகவே செயல்படுத்துகிறார்.

    நமது எதிராளியை நாம் மன்னித்து விட்டாலும் அவனை நம்புவது மிகக் கடினம். ஆனால் தேவன் எவர்களை மன்னித்தாரோ, எவர்கள் பாவங்களை மறந்தாரோ அவர்களை முழுமையாக நம்புகிறார். அவர்களையும் தமது ஊழியனாக தெரிந்து  கொள்ளுகிறார். ராஜரீக ஆசாரியராக அவர்களை  நியமிக்கிறார். தம்முடைய நித்திய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றும்படி அவர்களை கருவியாக உபயோகப்படுத்துகிறார்.  இவருடைய அன்பைதான் என்னவென்று சொல்லுவது! ஆகவேதான், பவுல் இந்த உலகத்தில் எதுவுமே இந்த அன்பைவிட்டுத் தம்மை பிரிக்கமுடியாது என்று நிச்சயத்திருக்கிறேன் என்று சொல்லமுடிந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.