இயேசுவை சுட்டிகாட்டு

கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 19                இயேசுவை சுட்டிகாட்டு     யோவான் 1: 29 – 37

“இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துத் தீர்க்கிற

தேவ ஆட்டுக்குட்டி” (யோவா 1:29)

       யோவான்ஸ்நானகன் ஆண்டவராகிய இயேசு அவனிடத்தில் வரக்கண்டு இவ்விதம் சொன்னார். மேலும் அவருடைய சீடர்களிடம் ‘இதோ தேவ ஆட்டுக்குட்டி’ என்று ஆண்டவராகிய இயேசுவை சுட்டிக்காண்பித்தான். மெய்யான தேவ ஊழியனுக்கு இதுதான் அழகு. அவன் எப்போதும் ஜனங்களுக்கு இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறவனாகக் காணப்படுவான்.

    இந்த நாட்களில் அநேக ஊழியர்கள் இயேசுவை ஜனங்களுக்கு சுட்டிக்காட்டுவதில்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தன்னையே ஜனங்களுக்குக் காட்டவிரும்புகிறார்கள், அவ்விதம் செய்கிறார்கள். தான் விசேஷித்த வரம் பெற்ற நபர் என்று சொல்லி, தன் பக்கம் ஜனங்களை இழுக்க முயற்சிக்கிறார்கள். இவ்விதமான ஊழியர்களைக்குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இவர்கள் கள்ளத்தீர்க்கத்தரிசிகள் ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு ஜனங்களை வஞ்சிக்கிறவர்கள், எச்சரிக்கையாயிருங்கள்.

      மேலும் யோவான்ஸ்நானகன் தன்னைப்பற்றி என்ன சொல்லுகிறார்? நான் இயேசுவல்ல, இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்த ஒரு கருவி தான் (யோவான் 1:31). நான் ஒரு பாவி, தேவனுக்கு சமமானவனல்ல என்று தன்னைக்குறித்து மெய்யாலும் அறிக்கையிட்டான். அதோடு நின்றுவிடாமல் ‘அவர் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவ்விழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல’ (யோ 1:27) என்றார். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதே யோவானின் குறிக்கோள்.

   இவ்விதமான சிந்தையில்லாத ஊழியக்காரனைக் குறித்து எச்சரிக்கையாயிரு. மெய் ஊழியக்காரனின் மிக முக்கிய குணாதிசயங்களில் முக்கியமானது தாழ்மை. எங்கு தாழ்மையில்லையோ அங்கு இயேசுவுக்கு இடமில்லை. தாழ்மை இல்லாத இடத்தில் பிசாசுதான் இருப்பான். ஆனால் அவன் ஒளியின் வேஷம் தரித்திருப்பான். ஊழியக்காரர்கள் என்று சொல்லி வருகிற அனைவரையும் நம்பாதே. நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்று சொன்ன இயேசுவைச் சுட்டிக்காட்டாதவன் மெய் ஊழியனல்ல. 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.