கர்த்தருடைய கிருபையே

கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 24                      கர்த்தருடைய கிருபையே              புலம்பல் 3:1-27

“நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே,

அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை” (புலம்பல் 3:22).

       அநேக சமயங்களில் நம்மைக்குறித்து நாம் இருக்கும் நிலைமையை விட மேன்மையாக எண்ணிவிடுகிறோம். ஆனால் நாம் இன்றுவரை பிழைத்திருப்பது கர்த்தருடைய கிருபையினால் மாத்திரமே. நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக சரிகட்டாமல், கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இரக்கத்தைக் காண்பிக்கிறவராக இருக்கிறார் என்பதை நினைத்து, நாம் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாகக் காத்துக்கொள்ளுவது மிக அவசியமானது.

     கர்த்தர், “நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை” (மல்கியா 3:6) என்று சொல்லுகிறார். நம்முடைய நீதியினால் அல்ல, கர்த்தருடைய கிருபையினால் இம்மட்டும் காக்கப்பட்டு வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஏனென்றால், அவர் நம் வாழ்க்கையை ஒரு நோக்கத்தோடு வழி நடத்திச் செல்லுகிறவராக இருக்கிறார். நாம் அவருக்குப் பிரியமான வழிகளைத் தெரிந்துகொள்ளுவதை, நம் வாழ்க்கையில் எதிர்பார்க்கிறார். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் “அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது” (லூக் 1:50) என்று வேதம் சொல்லுகிறது.

   கர்த்தருக்கு நாம் பயப்படுவோம். அப்பொழுது நாம் தலைமுறை தலைமுறைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுவோம். இந்த உலகத்தில், நம் வாழ்க்கையில் தலைமுறைக்கும் இருக்கும்படியான ஆசீர்வாதமானது, கர்த்தருக்குப் பயப்படுதலிலே தான் இருக்கிறது.  அவ்விதமாக தேவனுக்கு நாம் பயந்து வாழும்பொழுது, நம்முடைய வாழ்க்கையில் நம் பாவங்களை மன்னித்து நமக்கு உதவி செய்கிறார். “அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்” (மீகா 7:18) என்று வேதம் சொல்லுகிறது. அவர் எப்பொழுதும் உனக்கும் எனக்கும் கிருபை செய்யவே விரும்புகிறார். அவர் இன்னுமாக, “அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்” (மீகா 7:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நாம் தேவனுடைய கிருபையினால் பிழைத்திருக்கிறோம் என்பதை அறிந்து, எப்பொழுதும் நாம் தாழ்மையுள்ளவர்களாக வாழுவது நல்லது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.