ஜீவனை நஷ்டப்படுத்தக் கூடாது

கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 6                    ஜீவனை நஷ்டப்படுத்தக் கூடாது              மாற்கு 8:1-38

“மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,

தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36)

            அருமையான சகோதரனே, சகோதரியே நீ மெய்யாலும் இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா? உன்னுடைய வாழ்க்கை கிறிஸ்துவுக்குள் கட்டப்பட்டுள்ளதா? உனக்கு பாவத்தில் இருந்து விடுதலை இருக்கிறதா? இவைகள் உன்னுடைய வாழ்க்கையில் அதி முக்கியமானது என்பதை நீ எப்பொளுதாகிலும் சிந்தித்தது உண்டா? அவ்வாறு இல்லையென்றால், தேவன் இரக்கமுள்ளவராக, தன்னுடைய வார்த்தைகள் மூலம் இன்றைக்கு உன்னோடுகூட பேசுகிறார். நீ உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், உன் ஆத்துமாவை இழந்து போனால் என்ன பிரயோஜனம் என்பதைச் சிந்தித்துப்பார்.

            “அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை”( சங் 49:17). இந்த குறுகிய கால வாழ்க்கையில், நீ இந்த உலகத்தில் எவ்வளவு மேன்மைக்குரிய காரியங்களைச் சுதந்தரித்துக் கொண்டாலும், அல்லது சாதித்தாலும் அவைகளில் ஒன்றும் உன்னை பின் தொடருவதில்லை. அதே சமயத்தில் உன் ஆத்துமாவைக் குறித்து அக்கறையில்லாமல் உன் வாழ்க்கையைக் கடத்திச் செல்லுவாயானால், அதைப்போல  உன் வாழ்க்கையில் நீ நஷ்டப்படுத்தினக் காரியம் வேறொன்றுமில்லை.

            பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் “கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்” (பிலி 3:9) என்று எழுதுகிறார். உன்னுடைய வாழ்க்கையில் நீ கிறிஸ்துவுக்குள் இருக்கிறாயா, இல்லையா என்பதுதான் அதி முக்கியமான கேள்வியாக இருக்கவேண்டும். பவுல் கிறிஸ்துவுக்குள் “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக” (பிலி 3:7-8) என்று சொல்லுகிறார். ஆகவே உன் வாழ்க்கையில் கிறிஸ்து இயேசுவை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கிற அறிவு உன்னிடத்தில் உண்டா? அவரோடு கூட ஜீவனுள்ள தொடர்புகொண்ட ஒரு வாழ்க்கை உன்னிடத்தில் உண்டா? இதைக் குறித்து சிந்தித்துப்பார். இதுவே உன் வாழ்க்கையின் அதிமுக்கியமான தேவை என்பதை அறிந்துகொள். மேலும் இந்த உலகத்தில் எந்தவிதமான மேன்மைகளும் உன் ஆத்துமாவை இரட்சிக்காது என்பதை உணர்ந்துகொள். இது மிக அவசியமானது.

You may also like...

Leave a Reply