கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 7            பொறுமையினால் ஆத்துமாவைக் காத்துக்கொள்       லூக் 21:1-19

“உங்கள் பொறுமையினால் உங்கள்

ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்” (லூக்கா 21:19).

       கிறிஸ்துவ வாழ்க்கையில் அதிமுக்கியமான குணங்களில் ஒன்று பொறுமை. நம்டைய விசுவாச வாழ்க்கைக்கு மிகமிக அவசியமானது. தேவனுடைய மெய்யான ஆசீர்வதங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு பொறுமை மிக அவசியம். இன்றைக்கு அநேகர் தங்களுடைய வாழ்க்கையில் மெய்யான ஆசீர்வாதங்களை விரும்புகிறார்கள். ஆனால், அதற்கு தேவையான பொறுமையைக் கொண்டிருப்பதில்லை. எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் “நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து” (எபி 6:11) என்று சொல்லப்படுகிறது.

  விசுவாசத்தோடு எங்கு பொறுமை உண்டோ, அங்கு ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ளுகிற கிருபையும் கொடுக்கப்படுகிறது. இன்னுமாக சங்கீதம் 40:1 –ல் “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்” என்று சொல்லப்படுகிறது. அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் என்பதை உன்னால் உணரமுடிகிறதா? கர்த்தருக்கு முன்பாக பொறுமையை உன்னுடைய வாழ்க்கையில் நீ தேடுவது மிக அவசியம் என்பதை சிந்திப்பது அதிமுக்கியமான ஒன்று.

      வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவனுடைய ஜனங்கள், உபவத்திரத்தின் மத்தியில் எவ்வாறு பொறுமையை காத்துக்கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. “தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும்”(வெளி 14:12). ஆகவே பரிசுத்தவான்களுடைய வாழ்க்கையில் காணப்படவேண்டிய அதிமுக்கியமான குணம் பொறுமை. பொறுமை இருக்கும்பொழுது கர்த்தர் உன்பக்கம் சாய்ந்து உன் கூப்பிடுதலைக் கேட்கிறவராக இருக்கிறார். அப்பொழுது தேவனுடைய வாக்குத்தத்தங்களை நீ சுதந்தரித்துக் கொள்ளமுடியும் என்பதை நீ மறந்துவிடாதே.