கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 18                கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்                  கலா 2: 1-21

“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும்,

பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்;

நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து

எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய

குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா 2:20).

       ஒரு மெய்க் கிறிஸ்தவன் இயேசு தனக்காகவே மரித்தார் என்பதை உணருகிறவனாக இருப்பான். பவுல் இங்கு சொல்லும்பொழுது, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன் என்கிறார். உன்னுடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து உனக்காக பட்ட பாடுகள், நிந்தைகள், அவமானங்கள், வேதனைகள், வருத்தங்கள் கணக்கிலடங்கா. விலையேறப்பெற்ற இரட்சிப்பை உனக்கு கொடுக்கும்படியாக , அவர் தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார்.

       ஆகவே பவுல் என்னில் அன்பு கூர்ந்து என்று சொல்லுகிறார். பவுல் மேலுமாக, கிறிஸ்துவின் அன்பு என்னை நெருக்கி ஏவுகிறது என்று சொல்லுகிறார். கிறிஸ்துவின் அன்பு உன்னில் இருக்கிறதா? அது உன்னை நெருக்கி ஏவுகிறதா? இன்னுமாக, 1 பேதுரு 1:8 -ல்  “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து” என்று பேதுரு சொல்லுகிறார்.

      அவரை இப்பொழுது கண்களால் காணவில்லை, ஆனால் அன்பு கூறுகிறோம். ஒருநாள் அவரை நிச்சயமாக  முகமுகமாய் காண்போம் என்பதை அறிந்திருக்கிறோம். ஒருநாள் நாம் அவரை தரிசிப்பது மாத்திரமல்ல, அவரோடுகூட நாம் என்றென்றும் வாழும்படியான நாட்கள் வரும் என்பதையும்  அறிந்திருக்கிறோம். இதுவே ஒரு கிறிஸ்தவனின் மகிழ்ச்சியான காரியமாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வருத்தங்கள், பாடுகள், துக்கங்களின் வழியாக கடந்து சென்றாலும், இயேவை குறித்த நம்பிக்கை நம்மை பெலப்படுத்தி தாங்குகிறதாக இருக்கிறது.