கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 26                   மரணபரியந்தம் தாழ்த்தினார்                   பிலி 2:1-11

“அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,

அதாவது சிலுவையின் மரணபரியந்தமும்

கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி 2:8).

     தெய்வக்குமாரன் வானாதி வானத்தையும் சிருஷ்டித்த கர்த்தர், ஒரு மனிதனாக இந்த உலகத்தில் வந்தது மனித அறிவினால் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரிய தாழ்மை. உன்னையும் என்னையும் அவர் இரட்சிக்கும்படியாக தன்னையே தாழ்த்தினார். இன்னுமாக பவுல், “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி 2:7) என்று சொல்லுகிறார். அவர் தன்னை ஒரு அடிமையாகவே உட்படுத்திக் கொண்டார். அருமையான சகோதரனே, சகோதரியே கிறிஸ்துவின் தாழ்மையை நாம் அதிகமாக நோக்கிப்பார்ப்போம். உன்னையும் என்னையும் அவர் இரட்சிக்கும்படி அவர் தன்னை அடிமையின் ரூபமெடுத்துத் தாழ்த்தினார்.

      உன்னையும் என்னையும் மீட்கும்படியாக, அவர் தன்னை வெறுமையாக்கினார். இயேசுவின் பாடுகளை அதிகமாய் சிந்திப்போம். இந்த வாழ்க்கையில் இவ்விதமாக இரட்சித்த தேவன், அவர் செலுத்தின மிகப்பெரிய கிரயத்தை நாம் எண்ணிப்பார்க்காமல் இந்த இரட்சிப்பின் மகிமையை  அனுபவிக்க முடியாது. அநேகர் இரட்சிக்கப்பட விரும்புகிறார்கள், ஆனாலும் அதற்குரிய கிரயத்தை செலுத்தின  இயேசுவை அவருடைய அன்பை, தாழ்மை, பாடுகளை எண்ணிப்பார்ப்பதில்லை.

      நம்முடைய வாழ்க்கையில் அவருடைய அந்த இரட்சிப்பினுடைய திட்டத்தை நமக்குள்  அதிகமாய் சிந்திப்போம். அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இந்த இரட்சிப்பினுடைய மேன்மையை உணர்ந்து, கிரயத்தை உணர்ந்து நாம் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.  அநேக சமயங்களில் நாம் இலவசமாய்ப் பெற்றுக்கொள்ளும் காரியங்கள் அற்பமாகக் காணப்படும் அல்லது எண்ணப்படும். ஆனால் இலவசமான இந்த இரட்சிப்பு மிகப்பெரிய விலைக்கிரயத்தைக் கொண்டு சம்பாதித்தது என்பதை உன் இருதயப் பலகையில் எழுதிக்கொள். அதற்கு நாம் கடன்பட்டவர்கள் என்பதைக் குறித்து மறந்துவிடாதே. அதற்கு கடன்பட்டவர்கள் என்று உணர்ந்து வாழும்படியான வாழ்க்கையே நம்முடைய மெய்யான இரட்சிப்பின் பிரதிபலிப்பாக காணப்படுகிறதாக இருக்கிறது.